/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/144_33.jpg)
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. கே.சி. பாலசாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க கடந்த 6ஆம் தேதி வெளியாகியது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பட வெற்றி தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காளி வெங்கட், “இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)