மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிரெண்டிங்’. இப்படத்தில் பிரேம்குமார் பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக ஜானரில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசுகையில், “சின்னப்படம் பெரிய படம் என எதுவுமே இல்லை, ஜெயிச்ச படம் ஜெயிக்காத படம் அவ்வளவு தான். இப்போது ஜெயித்துள்ள படங்கள் எல்லாம் சின்ன படங்கள் தான். கலையரசன் தான் முதலில் கால் பண்ணி, இந்தப்படம் பற்றி சொன்னார். இதில் இரண்டு பேர் மட்டும் நடிப்பதாகச் சொன்னார். கதை முழுதாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. நாம் இப்போது எல்லோரும் ஆன்லைனில் அடிமையாகி, லைக்குக்காக காத்திருக்கிறோம். இந்தப்படம் ஆன்லைன் மோகத்தை, அது எப்படி மனுஷனை மாத்துகிறது என்பதை அழுத்தமாகப் பேசியுள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சிவராஜ் இதற்கு முன்னால் போலீஸில் இருந்துள்ளார். எல்லோரும் ஐடியில் இருந்து வருவார்கள், இவர் போலீஸில் இருந்து வந்துள்ளார். அவருக்கு சினிமா தாகம் இருக்கிறது. கதையாக இப்படம் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் நேரில் தினசரி சந்திக்கும் மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது” என்றார். 

கலையரசன் பேசுகையில், “என் கேரியரில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். நான் ஹீரோவாக பல படங்கள் செய்துள்ளேன் அதில் இது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும். வேறொரு படம் செய்வதாக ஆனந்த் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம், சிவராஜ் இந்தக்கதை சொன்ன போது எல்லோருக்கும் பிடித்தது. அவரை நோலன் என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம். அவரைப்பார்த்தால் போலீஸில் இருந்தவர் போலவே தெரியாது. மிகத்திறமையானவர். குறைந்த ஆர்டிஸ்ட் வைத்து 2 மணி நேரம் உட்கார வைப்பது ஈஸியான விசயமில்லை, அதை சிவராஜ் செய்துள்ளார். 

மியூசிக் கேமரா, நடிப்பு எல்லாம் சேர்ந்து தான் ஒரு சினிமாவில் மேஜிக் நடக்கும்.  சாம் சிஎஸ் மிக பிஸியாக இருந்தார், ஆனால் நாங்கள் கேட்டதற்காகச் செய்து தந்தார். பிரவீன் அவரோட சொந்தப்படம் போல அக்கறை எடுத்துக்கொண்டு செய்தார். இருவரால் இப்படத்தில் மேஜிக் நடந்துள்ளது. அலெக்ஸ் இதில் முகமில்லாமல் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். முகமே தெரியாமல் இருந்தாலும் நடித்தற்கு நன்றி. தயாரிப்பு தரப்பு முழு நம்பிக்கை வைத்தார்கள் அவர்களுக்கு நன்றி. நண்பன் ஶ்ரீகாந்த் இப்படம் முழுமையாக முக்கிய காரணம் அவனுக்கு நன்றி. தயாரிப்பில் முழு வேலையும் பார்த்தார். என் மனைவி பிரியா தான் உடை அலங்காரம் செய்துள்ளார் அவருக்கு நன்றி. இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.