கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை' விரைவில் வெளிவர இருக்கிறது.

'ஆளவந்தான்', 'காக்க காக்க', 'தொட்டி ஜெயா', 'துப்பாக்கி', 'தெறி' என தாணு தயாரித்த ஆக்ஷன் படங்களின் வெற்றி வரிசை பலமானதுதான். சமீபத்தில் இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தயாரிப்பாக '60 வயது மாநிறம்' திரைப்படத்தை தயாரித்திருந்தது வி கிரியேஷன்ஸ். அனைவராலும் பாராட்டப்பட்ட அந்தப் படத்திலும் விக்ரம் பிரபுதான் கதை நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சினிமா பயணத்தைத் தொடர் வெற்றிகளுடன் துவங்கிய விக்ரம் பிரபுவின் கிராஃப் சிறிது காலம் தொய்வடைந்தயிருந்தது. இன்று வெளியாகியுள்ள 'துப்பாக்கி முனை' டீசர் படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்குவதாக இருக்கிறது. முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள படத்தில் விக்ரம் பிரபு இதுவரையில்லாத புதிய தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார். ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு இயக்கிய 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. வெளிவரவுள்ள துப்பாக்கி முனை தனக்கு வர்த்தக ரீதியாகவும் வெற்றியைக் கொடுக்கும் என்று நம்பிக்கையோடுள்ளார் இயக்குனர். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது ACS பென்ஸ் மீடியா நிறுவனம்.