Advertisment

''தயவுசெய்து அந்தப் படத்தை ஓடிடி-ல் ரிலீஸ் செய்ய விடுங்கள்'' - கலைப்புலி தாணு வேண்டுகோள்!

hrh

Advertisment

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்கள் எதுவும் வெளிவராமல் இருக்கின்றன. இந்நிலையில் சூர்யாவின் '2டி' தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் கரோனா காரணமாக வெளியாவதில் சிக்கல் இருந்ததால் தற்போது அமேசான் நிறுவனம் இப்படத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. படக்குழு நேரடியாக டிஜிட்டலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் '2டி' நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த டிஜிட்டல் வெளியீடு தொடர்பாகத் தயாரிப்பாளர் தாணு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

"இன்றைய சூழ்நிலையில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிட முடிவெடுத்துள்ளதால், மிகப்பெரிய பிரச்சினையை தமிழ்த் திரையுலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கணிப்பு, அப்படி அமேசானிடம்கொடுத்தது தவறு என்று இருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்களின் இன்றைய காலகட்ட சூழ்நிலையில், அந்தப் படத்தைக் கொடுத்தது தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தப் படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகியிருந்தால் ஏப்ரல் மாதம் ஓடி, மே மாதம் ஓடிடி ப்ளாட்பார்மில் வெளியிடப்பட்டு இருக்கும். ஆனால், ஏப்ரல் மாதம் முழுக்கவே கரோனா பாதிப்பினால் திரையரங்குகள் முழுவதையும் அடைத்துவிட்டனர். ஏற்கெனவே அந்தத் தயாரிப்பாளருக்குத் திரையரங்கில் வெளியிடாததினால் எத்தனை கோடி இழப்போ, அதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஓடிடி பணத்தையும் இழந்துவிட்டால் என்ன செய்வது... ராஜசேகர் பாண்டியன் ஒரு சிறு தயாரிப்பாளர். சின்ன படத்தை எடுத்துசெய்துகொண்டிருக்கிறார். அந்தப் படமொன்றும் பெரிய படமல்ல. குறைவாகத்தான் கொடுத்திருப்பார்கள். இணையத்தில் கற்பனைக்கு அளவில்லாமல் எழுதுவார்கள். ஓடிடி-ல் விற்ற பணத்தின் மூலம் இன்னொரு சின்ன படம்தான் எடுப்பார்கள்.

நண்பர்களே, திரையரங்குகளுக்கு எந்தக் காலத்திலுமே அழிவில்லை. தொலைக்காட்சி வரும்போது நாம் என்ன சொன்னோம். சினிமா அழிந்தது என்றோம். வீட்டுக்கு வீடு சிடி ப்ளேயர் வந்தவுடன் சினிமா அழிந்தது என்றோம். 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து வெளியிட்டால், அன்றைக்கு இரவே இணையத்தில் வந்துவிடும். எதை நம்மால் தடை செய்ய முடிந்தது. சினிமா அழிந்துவிட்டதா என்ன... அந்த மாதிரி தான் இந்த ஓடிடி ப்ளாட்பார்ம். வருடத்துக்கு 12- லிருந்து 15 படங்கள்தான் வாங்குவார்கள். அதிலும் பெரிய படங்களாக வாங்கிவிட்டார்கள் என்றால், சின்ன படங்களை வாங்கவே மாட்டார்கள். அத்தி பூத்தாற்போல் ஒரு சின்ன படம் வாங்கியிருக்கும்போது இதை வரவேற்க வேண்டும். இதற்குத் தடைபோட்டு விடாதீர்கள். பல தயாரிப்பாளர்களின் படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன. அவர்கள் படத்தை இனி முடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எங்களுக்குக் கொள்கை அளவில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கொடுக்கப் போவதும் கிடையாது. ஈகை குணம் கொண்ட ஒரு பட நிறுவனம், கல்விக்காக நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்தப் பணம் உதவியாக இருக்குமே தவிர, தடையாக இருக்காது. தயவுசெய்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தப் படம் ஓடிடி-ல் திரையிடப்படட்டும். எதிர்காலத்தில் நாம் கூடி உட்கார்ந்து பேசி, எப்படிச் செய்யலாம் என்று முடிவெடுப்போம்.

Advertisment

http://onelink.to/nknapp

அனைவருமே என்னுடைய நண்பர்கள்தானே. சினிமாவை அழிக்கவே முடியாது. ஒரு வழி அடைத்தால் கடவுள் இன்னொரு வழி கொடுப்பார். அதனால் நமக்கு நல்லதொரு தீர்வைக் கடவுள் தருவார். ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்றுசேர்ந்து பேசக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். எதிர்காலத்தில் நல்ல முறையில் வியாபாரம் செய்வோம். 'பொன்மகள் வந்தாள்' ஓடிடி-ல் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம். அவர்களைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ வேண்டாம். காலத்தின் கட்டாயம் கொடுக்க வேண்டிய சூழல். அவர்களும் மனுதர்மம் பிரகாரம்தான் நடந்திருக்கிறார்கள். ஆகவே, எனது அன்பு நண்பர்களே உங்களிடம் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லதொரு வாகை சூடி வலம் வருவதற்கு வழிவிடுங்கள். நல்லமுறையில் திரையுலகை வழிநடத்திச் செல்வோம். சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்களை இந்தத் திரையுலகம் கைவிடாது. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்தச் சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதை நாமெல்லாம் கூடிப்பேசி முடிவெடுப்போம். நமக்குள் ஒற்றுமை வேண்டும். இந்த ஒற்றுமையில்லாததால் வரும் பிரச்சினைதான் இது. இந்த ஒற்றுமைக்கு யார் தடையாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்" எனக் கூறியுள்ளார்.

suriya kalaipuli s thanu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe