கலைஞரின் நகைச்சுவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று, அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. ஒருமுறை சட்டமன்றத்தில் ஒரு காரசார விவாதம் நடைபெற்று வந்தது. ஒரு எதிர்கட்சி உறுப்பினர், "கும்பகோணம் கோயில் குளத்தில் முதலை உள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறு ஏன் செய்தீர்கள்? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தார். உடனடியாக கலைஞர் எழுந்தார். அவர் முதல்வராக இருந்த சமயம் அது. மாண்புமிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அரசாங்கம் முதலைத்தான் போடமுடியுமே தவிர முதலையை போட முடியாது என்று கூறினார். கேள்வி கேட்ட எதிர்கட்சி உறுப்பினரும் அவரின் பதிலை கேட்டு அவர் சிரித்து விட்டார்.

ஒருமுறை கலைஞர் 'இந்து' என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாக பொதுகூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சங்பரிவார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வட மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின் தலையை சீவி விடுவேன் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் "உங்களின் தலையை சீவி விடுவதாக சாமியார் ஒருவர் கூறியுள்ளாரே அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு யாரும் எதிர்பாராத ஒரு பதில் கலைஞரிடம் இருந்து உடனடியாக வந்தது, "நானே என் தலையை சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அவருக்குதான் ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போமே" என்று.
இதைவிட ஒரு சுவாரசிய சம்பவம் நடிகர் விஜய் படத்தின் வெற்றி விழாவில் நடைபெற்றது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி விழாவில் பங்கெடுத்த அவர், வெற்றி விழாவில் பேசும் போது, "தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே" என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சை கேட்ட விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தனர். இப்படி கலைஞரின் நகைச்சுவை உணர்வால் அரங்கு அதிர்ந்து சிரித்த சம்பவங்கள் பல நடந்துள்ளது.