Advertisment

"யாரோ ஒருத்தருக்கு நான் வில்லனாக நடிக்கணுமா?" - ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த அன்றைய பிரபல நடிகர்!

Kalaignanam

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனபன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துபல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பைரவி படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

பைரவி படத்தின் மூலமாக நடிகர் ரஜினியை நான்தான் கதாநாயகனாக அறிமுகம் செய்தேன். அந்தப் படத்தை எடுத்து முடிக்க நான் பட்டபாடு கடவுளுக்குத்தான் தெரியும். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. சாண்டோ சின்னப்பத்தேவர்தான், நீ புள்ளகுட்டிகாரன்... படம் எடுத்து சம்பாதிடா... நான் மூன்று லட்சம் தாரேன் என்றார். அந்த ஆசையில்தான் பைரவி படத்தை தொடங்கினேன். அந்தகாலகட்டத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை, கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால், தேவருக்கு அதில் விருப்பமில்லை. ரஜினியை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று அவர் யோசனை கூற, நான் வாக்கு கொடுத்துவிட்டதால் மாற்ற இயலாது என்றேன். அதற்கு தேவர், நீ வாக்கு கொடுப்பப்பா... நான் பணம் கொடுக்குறேன்ல என்றார். வாக்கு கொடுத்துவிட்டு அதற்கு மாறாக நடக்க எனக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்ணே... நானே படம் எடுத்துக்கிறேன் எனக் கூறிவிட்டு நான் கிளம்பிவந்துவிட்டேன்.

Advertisment

ரஜினியிடம் நான் கதை கூறியபோது, கதையை கேட்டுவிட்டு கதை நல்லா இருக்கு... யாருக்கு இந்தக் கதை என்றார் ரஜினி. நீங்கதான் என நான் கூற, நானா என ஒருவித தயக்கத்துடன் ரஜினி கேட்டார். ரஜினியின் தயக்கத்தைக் கண்டு, இவர் நடிப்பாரா என எனக்கு சந்தேகமாக இருந்தது. சமீபத்தில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழாவில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார். நான் வில்லன் கதாபாத்திரத்திற்காக கதை கூற வந்திருக்கிறேன் என்று ரஜினி நினைத்துள்ளார். நீங்கள்தான் ஹீரோ என்றவுடன் அவருக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் கதாநாயகனாக நடித்தால் உள்ள பொழப்பும் போய்விடும் என அவருக்கு நெருக்கமானவர்களுடன் ரஜினி கூறியுள்ளார். நான் அப்போது 15 ஆயிரம் சம்பளம் பேசியிருந்தேன். இந்த வாய்ப்பை நிராகரிப்பதற்காக 50 ஆயிரம் சம்பளம் கேட்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். அதன்படி, 50ஆயிரம் சம்பளம் என்றால் இவரால் கொடுக்க முடியாது. அதனால் வேறு நடிகரைத் தேடி போய்விடுவார் என்று நினைத்து, என்னிடம் 50 ஆயிரம் சம்பளம் கேட்டனர்.

50 ஆயிரம்தான வேணும்... இதோ வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்து, கழுத்தில் இருந்த நகை, வீட்டில் இருந்த நகை அனைத்தையும் விற்று ரஜினிக்கு 30 ஆயிரம் கொடுத்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் மீதி பணத்தை தந்துவிடுகிறேன் எனக் கூறினேன். மொத்தமாக 30 ஆயிரம் ரூபாயை பார்த்தது அதுதான் ரஜினிக்கு முதல்முறை என்று என்னுடைய 90ஆவது பிறந்தநாள் விழாவில் ரஜினி கூறினார். நான் தாலியை விற்று பணம் கொடுத்த விஷயத்தை நடிகர் சிவகுமார் மேடையில் போட்டு உடைத்துவிட்டார். சிவகுமார் இப்போது சொல்லித்தான் அந்த விஷயமே தனக்கு தெரியும் என்றும் ரஜினி கூறினார்.

ஹீரோவாக நடிக்க ரஜினிக்கு பணம் கொடுத்துவிட்டேன். அடுத்து யாரை வில்லனாக நடிக்க வைக்க என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி என்றால் அவர்களுக்கு வில்லனாக நடிக்க நம்பியார், பாலையா, வீரப்பா எனப் பல ஆட்கள் இருக்கிறார்கள். ரஜினிக்கு வில்லன் என்றால் யார் நடிக்க வருவார்? அப்போதுதான் ஏன் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்கவேண்டாம் என தேவர் கூறினார் என்பது புரிந்தது. 1953லிருந்தே நடிகர் முத்துராமன் எனக்கு நல்ல நண்பர். ஒருகாலத்தில் திண்டிவனத்தில் நாடகம் நடத்தி பெயரும் புகழும் வாங்கியவர்கள், சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவுடன் நாடகக் கம்பெனியை மூடிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்கள். நான் அடிக்கடி எஸ்.எஸ்.ஆர் நாடகக்கம்பெனிக்கு செல்லும்போது முத்துராமனை அங்கு சந்திப்பேன். கே.பி.காமாட்சி அண்ணனின் உறவுக்காரன் என்பதால் அந்த நாடகக்கம்பெனியில் எனக்கு தனி மரியாதை கிடைக்கும். அங்கிருந்த அனைவருமே என்னிடம் நல்லா பழகுவார்கள்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் முத்துராமன் கதாநாயகனாக மிகச்சிறப்பாக நடித்திருப்பார். எனக்கும் முத்துராமனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததால் பைரவி படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று நினைத்து அவரிடம் கேட்கப்போனேன். என் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நீங்கள் நடிக்கவேண்டும் என்று நான் கூறியதும், அவர் கடுப்பாகிவிட்டார். நான் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறேன்... அடுத்தடுத்து படங்களும் புக் ஆகிட்டு இருக்கு... அங்க அங்க ஒரு சீன் ரெண்டு சீன் நடித்த யாரோ ஒருத்தருக்கு நான் வில்லனாக நடிக்கவேண்டுமா என்றுவிட்டார். கோபத்தில் அவருக்கு கண்ணெல்லாம் சிவந்துவிட்டது. நீங்கள் என்னுடைய நண்பர் என்ற உரிமையில் இப்படிவந்து கேட்டுவிட்டேன்... என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவந்துவிட்டேன்.

kalaignanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe