Advertisment

'தமிழ்நாட்டின் வீதிகளில் 5000க்கும் மேற்பட்ட முறை போடப்பட்ட நாடகம்' - கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Kalaignanam

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நல்லதங்காள் கதை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

நல்லதங்காள் கதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நல்ல தங்கை கதையும் நல்ல தங்காள் கதையும் ஒன்று எனப் பலர் நினைக்கிறார்கள். இரண்டும் வேறானது. நல்ல தம்பி, நல்ல தங்காள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். தென்காசி பகுதியில் இருந்த ஒரு பகுதியை ஆண்டு வந்த நல்ல தம்பி, தங்கை மீது அளவு கடந்த பாசம் கொண்டவன். வேறொரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நல்லதங்காளைப் பெண் கேட்டு வருகிறார்கள். அண்ணனைப் பிரிந்து தொலைதூரத்திற்குச் செல்ல விருப்பமில்லாத நல்லதங்காள் முதலில் மறுக்கிறாள். பின், நல்ல தம்பி அடிக்கடி வந்து பார்ப்பதாகக் கூறி அவளைச் சம்மதிக்க வைக்கிறான். இருவருமே மன்னர் வம்சம் என்பதால் வெகுவிமரிசையாகத்திருமணம் நடைபெற்றது. நூறு மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு சென்றனர்.

Advertisment

திருமணம் முடிந்து நல்ல தங்காளை அழைத்துக்கொண்டு செல்ல மாப்பிள்ளை வீட்டார் தயாரானார்கள். அண்ணன் நல்ல தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு நான் போகமாட்டேன் என நல்லதங்காள் கதறி அழுகிறாள். அண்ணன் ஆறுதல் கூறி அவளை வண்டியில் ஏற்றுகிறான். ராஜாக்கள் பயன்படுத்துகிற ஒரு வண்டியில் அமர்ந்து அண்ணனிடம் இருந்து பிரியா விடைபெற்றுக் கிளம்புகிறாள் நல்லதங்காள். மணமுடித்துச் சென்ற நாட்டில் நல்லதங்காளுக்கு ராஜ வாழ்க்கை. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர். அப்படியே பதினைந்து ஆண்டுகள் கடந்தன. அந்த பதினைந்து ஆண்டுகளில் நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள். திடீரென அந்த நாட்டில் வறட்சி ஏற்படுகிறது. நல்லதங்காளுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்த நேரத்திலேயே நாட்டில் வறட்சி ஏற்பட ஆரம்பித்திருந்தது. அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்தபோது நாட்டில் உச்சக்கட்ட வறட்சி நிலவியது. குடிக்க நீரில்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானார்கள். ஆடு மாடுகள் வரிசையாக இறக்க ஆரம்பித்தன.

பெரும்பாலான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டனர். மீதி இருக்கும் மக்கள் ராஜாவிடம் சென்று முறையிடுகின்றனர். இருக்கிற வேலைக்காரர்கள் அனைவரையும் அனுப்பி, ஆங்காங்கே இருந்தே தண்ணீர் கொண்டுவந்துதான் அரண்மனையிலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அதில் உங்களுக்கும் பாதி கொடுக்கட்டுமா என ராஜா கேட்கிறார். நீங்கள் நல்லா இருந்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும் எனக் கூறி மக்கள் மறுத்துவிடுகின்றனர். உங்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது எனக் கூறிய ராஜா, எவ்வளவு கஷ்டமானாலும் சரி... நம் பகுதிக்குத்தண்ணீர் கொண்டுவர விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளிக்கிறார்.

உடனே, தன்னுடைய மனைவியையும் ஏழு குழந்தைகளையும் அவளுடைய அண்ணன் தேசத்திற்குக் கிளம்பச் சொல்லிவிட்டு, தன்னுடைய தேசத்திற்குத்தண்ணீர் கொண்டுவருவதற்கான வேலைகளை ஆரம்பிக்கிறார். கிளம்பும்போது நீங்களும் எங்களுடன் வந்துவிடலாமே என மனைவி கேட்க, என்ன ஆனாலும் என் மக்களை விட்டு நான் வரவேமாட்டேன்... நீ கிளம்பு... நம் நாட்டில் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து நிலைமை சரியானதும் நான் வந்து உன்னை அழைக்கிறேன் என ராஜா கூறிவிடுகிறார். நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்தே தன் அண்ணன் தேசத்தை வந்தடைகிறார். அண்ணனின் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று உள்ளது. இனி நம் குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று வானத்தைப் பார்த்து நல்லதங்காள் கும்பிடுகிறாள். அடுத்து, அண்ணனின் தேசத்தில் நடந்தது என்ன என்பதை நோக்கிக் கதை நகரும்.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முறை இந்த நாடகம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும். அந்தக் காலத்தில் இந்த நாடகத்திற்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நாடகத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.

kalaignanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe