Skip to main content

"நான் உங்களுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்" - யயாதி மன்னனை அதிரவைத்த பணிப்பெண்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதின் இரண்டாம் பகுதி பின்வருமாறு...

 

முதல் பகுதி...

 

ஒரு குடிலில் வசித்துவரும் சாதாரண மகரிஷி சுக்ராச்சார்யாரின் மகள் தேவயானி, அரசரின் மகள் சர்மிஷ்ட்டையை தன்னுடைய பணிப்பெண்ணாக அழைத்துச் சென்றது குறித்து கடந்த பகுதியில் விரிவாக கூறியிருந்தேன். யயாதியின் நாட்டில் தேவயானிக்கு பணிப்பெண்ணாக இருந்து வேலை செய்துவருகிறாள் சர்மிஷ்ட்டை. அவளை இந்த வேலையைச் செய், அந்த வேலையைச் செய் என மோசமாக நடத்துகிறாள் தேவயானி. அன்று யயாதி மன்னனுக்கு பிறந்தநாள். அதற்கான விழாவில் அனைவருக்கும் வாரிவாரி உதவிகள் செய்துகொண்டிருந்தான். அன்று யயாதி மன்னனை பார்த்த சர்மிஷ்ட்டைக்கு அவன் மீது ஆசை ஏற்படுகிறது. யயாதி மன்னன் பேரழகன். நந்தவனத்தில் அமர்ந்து அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கிறாள்.

 

அந்த விழா முடிந்ததும் நந்தவனம் வழியாக வந்த யயாதியைப் பார்த்து சர்மிஷ்ட்டை வணக்கம் வைக்கிறாள். அவனும் பதிலுக்கு வணக்கம் வைக்கிறான். அனைவருக்கும் கேட்டதை கொடுத்தீர்கள். நான் ஒன்று கேட்டால் கொடுப்பீர்களா என்கிறாள் சர்மிஷ்ட்டை. அவன் தாராளமாக கேளு எனக் கூற, நான் உங்களுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறாள். அன்றிலிருந்து யயாதி தினமும் இரவு தேவயானிக்கு தெரியாமல் சர்மிஷ்ட்டையை சந்திக்கிறான். அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டே இருக்க, சர்மிஷ்ட்டைக்கு மூன்று குழந்தைகள் பிறந்துவிடுகின்றன. யயாதி மன்னனுக்கு ஏற்கனவே தேவயானி மூலம் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒருகட்டத்தில் இந்த விஷயம் தேவயானிக்கு தெரியவர, தன்னுடைய தந்தைக்கு சேதி அனுப்பிவிடுகிறாள். அவர் கிளம்பிவந்து மகளிடம் முழுமையாக விசாரிக்கிறார்.

 

ad

 

மகள் விளக்கிச் சொன்னதும் யயாதியை அழைக்கிறான். ஏதாவது சாபம் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே அவர் வந்து நிற்க, கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொருத்தி மேல் ஆசைப்பட்டு அவளுக்கு மூன்று குழந்தைகளை கொடுத்ததால் உனக்கு முதுமை சாபம் அளிக்கிறேன் என சாபம் இடுகிறார். உடனே யயாதி மன்னன் முதுமையடைந்து உடல் குறுகி குள்ளமாகிவிடுகிறான். மகரிஷி,  என்னதான் இருந்தாலும் நான் இந்த நாட்டின் மன்னன்.  எனக்கு இப்படி ஒரு கேவலமான சாபம் கொடுத்துவிட்டீர்களே. நான் உங்கள் மருமகன். இது வெளியே தெரிந்தால் இந்த நாடு உங்களையும் தவறாக நினைக்குமே. நான் செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறான். உடனே, மகரிஷி மொத்தம் உனக்குள்ள 5 குழந்தைகளில் யாரிடமாவது இந்த முதுமையை கொடுத்துவிட்டு அவனுடைய இளமையை நீ வாங்கிக்கொள். நீ ஆண்டு அனுபவித்து வாழ்ந்த பிறகு அந்த இளமையை வாங்கியவனிடமே கொடுத்துவிட்டு உன் முதுமையை வாங்கிக்கொள் என்கிறார். 

 

தேவயானிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளிடமும் சென்று அவர்கள் இளமையை கேட்கிறான் யயாதி. அவர்கள் இருவரும் மறுத்துவிடுகின்றனர். பின், சர்மிஷ்ட்டைக்கு பிறந்த மூன்று குழந்தைகளிடம் சென்று கேட்கிறார். முதல் இரண்டு குழந்தைகளும் மறுத்துவிட, மூன்றாவது மகன் புரு சம்மதிக்கிறான். அவரது இளமை யயாதிக்கு மாறுகிறது. யயாதியின் முதுமை புருவுக்கு மாறுகிறது. 

 

அந்த இளமையோடே சர்மிஷ்ட்டையிடம் செல்கிறான் யயாதி. உன்னுடைய உடம்பில் இருப்பது என் மகன். உன்னுடன் எப்படி நான் உறவாட முடியும் எனக் கூறி அவனைத் தொட அனுமதிக்க மறுத்துவிட்டாள். மன்னனுக்கு வேறு பெண்ணே கிடைக்காதா என்ன? பிற பெண்களுடன் ஆண்டு அனுபவித்து, ஒருகட்டத்தில் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். ஆயிரம் ஆண்டுகள் அந்த இளமையுடன் வாழ்ந்தான் யயாதி. பின், புருவிடமே அந்த இளமையை ஒப்படைத்துவிட்டு யயாதி தவத்திற்கு சென்றுவிடுகிறான். 

 

தவத்திற்கு போகும்முன், என்னுடைய பரம்பரையை ஆண்டு விருத்தி செய்ய இந்த நாட்டிற்கு மன்னனாக உன்னை நியமிக்கிறேன் என புருவை நியமித்துவிட்டு சென்றார். கட்டிய மனைவிக்கு இரண்டு மகன்கள் இருந்தபோதிலும் தனக்காக தன் இளமையை தியாகம் செய்த புருவிடம் தன்னுடைய அதிகாரத்தை ஒப்படைத்தான் யயாதி. இதுதான் மகாபாரதத்திற்கே வித்து.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.