Skip to main content

"என்னை கிணத்துல தூக்கி போடாதம்மா..." கதறி அழுத 5 வயது கே.பி. சுந்தராம்பாள்... கண்ணீர் வடித்த ஊர் மக்கள்!

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நாடகக் கம்பெனியில் இருந்து கே.பி. சுந்தராம்பாள் தப்பி ஓடியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கே.பி. சுந்தராம்பாளின் அம்மா, அவரையும் அவரது தம்பியையும் ஒரு கோவிலில் விட்டுச்சென்ற சம்பவத்தைப் பற்றி கடந்த பகுதியில் கூறியிருந்தேன். மேலும், கே.பி. சுந்தராம்பாளின் திறமையைக் கண்ட அந்தக் கோவில் குருக்கள், அவரை ஒரு நாடகக் குழுவினரிடம் அறிமுகம் செய்துவைத்தது பற்றியும் கூறியிருந்தேன். அதன் பிறகு, நடந்த சம்பவத்தை இந்தப் பகுதியில் கூறுகிறேன்.

 

கே.பி. சுந்தரம்பாளின் திறமையைக் கண்டு அதிசயித்துப்போன அந்த நாடகக் குழுவினர், அவரையும் அவர் தம்பியையும் நாடகக் குழுவில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தனர். நல்லதங்காள் நாடகம் போடுவதற்கு நாடகக் குழுவினர் தயாரானார்கள். அதற்கான ஒத்திகையும் நடந்தது. அதில், கே.பி. சுந்தராம்பாளும் அவரது தம்பியும் நடித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். 7 குழந்தைகளைப் பெற்ற தாய், வறுமை தாங்காமல் தன்னுடைய குழந்தைகளைக் கிணற்றில் போட்டுவிட்டு தானும் விழுந்து இறந்துவிடுவாள். இதுதான் நல்லதங்காளின் கதை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்ராயிருப்பில் நல்லதங்காள் கோவில் உள்ளது. அந்தக் காலங்களில் நல்லதங்காள் நாடகம் என்றால் மிகவும் பிரபலம். அட்டையில் ஒரு கிணறு மாதிரி வடிவமைத்திருப்பார்கள். நல்லதங்காள் பாடிக்கொண்டே ஒவ்வொரு குழந்தையாக அந்தக் கிணற்றுக்குள் தூக்கி எறிவார். எத்தனை முறை பார்த்தாலும் முதல்முறை பார்ப்பதுபோல கண்ணீர் விட்டுக்கொண்டு அதை மக்கள் பார்ப்பார்கள். குறிப்பாக நல்லதங்காள் நாடகம் என்றால் பெண்கள் கூட்டம் நிரம்பிவழியும். 

 

அன்றொருநாள், இந்த நாடகத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, அனைவரும் தயாராக இருந்தனர். மக்களும் பெரிய அளவில் திரண்டிருந்தார்கள். கிணற்றுக்குள் தூக்கி எறிய வேண்டிய குழந்தைகளில் கே.பி. சுந்தராம்பாளை ஏழாவது குழந்தையாக நிறுத்திவைத்திருந்தனர். ஐந்தாவது குழந்தையாக கே.பி. சுந்தராம்பாளின் 3 வயது தம்பியை நிறுத்தியிருந்தார்கள். நல்லதங்காள் வேடமிட்ட பெண், ஒவ்வொரு குழந்தையாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தாள். அதைக் கண்ட கே.பி. சுந்தராம்பாளின் தம்பி உண்மையான கிணற்றில்தான் தூக்கி எறிகிறார்கள் என்று நினைத்து 'ஐய்யயோ...' என அலறியடித்து ஓடிவிட்டான். அதைப் பார்த்த மக்கள் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். பின், நிலைமையை எடுத்துச் சொல்லி, ஏழு குழந்தைகள் என்பதை ஆறு குழந்தைகள் என மாற்றி நாடகத்தைத் தொடர்ந்தனர். 

 

கடைசி குழந்தையாக உள்ள கே.பி. சுந்தராம்பாளைத் தூக்கி எரியும் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமான காட்சி. அந்தக் காட்சியின்போது, “எல்லாரையும் தூக்கிப்போட்டு கொன்னுட்ட... அம்மா என்னை விட்டுவிடு... நம்ம குடும்ப பேர் சொல்றது மாதிரி எங்கையாவது அடிமை வேலை செஞ்சு நான் பொழச்சுக்குவேன்” எனப் பாடிக்கொண்டே கே.பி. சுந்தராம்பாள் கூற வேண்டும். அந்தக் காட்சிக்கு கல் நெஞ்சு கொண்டவர்கள்கூட கண்ணீர் வடித்துவிடுவார்கள். “நானும் உங்ககூட விழுந்து சாகத்தான் போறேன்... உன்ன மட்டும் விட்டுட்டனா அனாதையா உன்ன விட்டுட்டு வந்துட்டோமேன்னு என் மனசு தாங்காதுமா” எனக் கூறி தாய் கண்ணீர் வடிக்க, பதிலுக்கு கே.பி. சுந்தராம்பாள் கண்ணீர் வடிப்பது என காண்போரை உருகவைத்துவிடும் அந்தக் காட்சி. 

 

கே.பி. சுந்தராம்பாள் பாடிய பாடலுக்காகவே 10 நாட்கள் நடக்க வேண்டிய நாடகம் 50 நாட்களுக்கும்மேல் நடந்தது. மற்றவர்கள் பாடும்போது, கே.பி. சுந்தரம்பாளை பாடச்சொல்லுங்கள் என ஜனங்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். சுந்தராம்பாள் வந்து பாடும்போது அந்த இடமே அவ்வளவு அமைதியாக இருக்குமாம். இந்த சம்பவம் நடந்தபோது கே.பி. சுந்தராம்பாளுக்கு வயது வெறும் ஐந்துதான். ஒரு நாடகக் கம்பெனி என்றால் அங்குள்ள அனைவருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களும் தெரிய வேண்டும். சுப்பையாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் ராமையா உடனே நடிக்க தயாராக வேண்டும். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாடகம் போடுவது நின்றுவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே இப்படி ஏற்பாடு செய்திருப்பார்கள். இதில், கே.பி. சுந்தராம்பாளுக்கு நடனம் சரியாக வராது. நடனம் சொல்லிக்கொடுக்க இருந்தவர் எவ்வளவு சொல்லிக்கொடுத்தும் அவருக்கு நடனம் சரியாக வரவில்லை. ஒருநாள் அப்படிச் சொல்லிக்கொடுக்கும்போது கம்பைக் கொண்டு காலில் அடித்துவிடுகிறார். கால் வீங்கிவிடுகிறது. அன்றைய இரவு நாடகம் முடிந்தவுடன் யாருக்கும் சொல்லாமல் நாடகக் கம்பெனியைவிட்டு ஓடிவிடுகிறார் கே.பி. சுந்தராம்பாள். எங்கு போகிறோம் என்றெல்லாம் தெரியாமல் கிளம்பிய கே.பி. சுந்தராம்பாள், கடைசியாக திருச்செந்தூர் முருகன் கோவிலைச் சென்றடைகிறார். 

 

திருச்செந்தூர் முருகன் முன்னால் நின்று அழுதுகொண்டே ஒரு பாடலைப் பாடுகிறார். வசீகரமான அந்தக் குரலைக் கேட்டு யார் இந்த பொண்ணு என்று அங்கிருந்த குருக்களுக்கு ஆச்சர்யம். யாருமா நீ... புதுசா இருக்கு என்று அவரிடம் விசாரிக்கையில், நாடகக் கம்பெனியில் இருந்து ஓடி வந்துவிட்ட விஷயத்தையும் அதற்கான காரணத்தையும் கூறுகிறார். பின், அங்கிருந்த குருக்கள் எந்த நாடகக் கம்பெனி என்று விசாரிக்கிறார். நாடகக் கம்பெனி பெயரைச் சொன்னதும் அந்தக் கம்பெனிக்குத் தகவல் அனுப்பிவிட்டு திருச்செந்தூரில் இருந்த ஒரு குருக்கள் கே.பி. சுந்தராம்பாளுக்கு அடைக்கலம் கொடுத்தார். கே.பி. சுந்தராம்பாளுக்காகத்தான் அந்த நாடகம் அந்த ஊரில் அத்தனை நாட்கள் ஓடியது. இப்போது அவர் இல்லாத காரணத்தால் நாடகம் பார்க்க வரும் ஆட்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. அதனால், கே.பி. சுந்தராம்பாள் எங்கே என்று நாடகக் குழுவினர் ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர். அதன் பிறகு, என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.