Advertisment

"அவருக்கு ஏதாவது கடன் இருக்கா?" சுடுகாட்டில் எம்.ஜி.ஆர் கேட்ட கேள்வி!

kalaignanam

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கவிஞர் காமாட்சியின் இறுதிச்சடங்கை எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்தியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

கவிஞர் காமாட்சி அண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். ஒருநாள் என்னை அழைத்த காமாட்சி அண்ணன், வீட்டில் இருந்த தம்பூராவை என்னிடம் கொடுத்து, “இதை விற்று காசாக்கிவிட்டு வா... எனக்கு குடிக்க காசு இல்ல... வீட்டுல பாப்பாக்கும் சோறு இல்ல” என்றார். சரி என்று அதை வாங்கிவிட்டு தெருவில் நடக்க ஆரம்பித்தேன். மார்வாடி கடையிலும் வாங்க மாட்டார்கள். இதை யாரிடம் சென்று விற்கலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன். அந்தக் காலத்தில் பிராமணர்கள்தான் அதிகம் பாடல் பாடுவார்கள். அவர்களுக்குத்தான் இது பயன்படும் என்பதால், மயிலாப்பூர் சென்று ஒவ்வொருவரிடமாக கேட்டேன். அந்த வீட்டில் சென்று கேளு... இந்த வீட்டில் சென்று கேளு... என ஆளுக்கு ஒரு வீட்டைக் காட்டினார்கள். ஒரு வீட்டில் வாங்கிக்கொள்கிறேன் எனக் கூறினார்கள். ஆனால், மாலை சங்கீதம் கற்றுக்கொடுக்க வரும் வாத்தியார் வந்து இது உபயோகமாக இருக்கும்; வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினால் மட்டுமே வாங்கிக்கொள்வேன் என்றார். அவர் மாலை வரச் சொன்னதால் தம்பூராவை தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மயிலாப்பூரில் இருந்து தி.நகர்வரை நடக்கமுடியாமல் நடந்துவந்தேன்.

Advertisment

தம்பூராவோடு நான் திரும்பிவருவதைக் கண்டதும் காமாட்சி அண்ணன் நடந்ததை விசாரித்தார். மாலை வாத்தியார் வந்து சொன்னால் ஒரு வீட்டில் வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார்கள் என்று அவரிடம் கூறினேன். “மாலைவரை அங்கேயே இருக்க வேண்டியதுதானே... ஏன் திரும்பி வந்தாய்” என்று என்னை திட்டினார். “ரொம்ப பசியெடுத்தது... அதான் வந்துவிட்டேன்” என நான் கூற, “பசியெடுத்தா இங்க என்ன சாப்பிட இருக்கு” என கோபத்துடன் கத்தினார். நான் தம்பூராவை தூக்கிக்கொண்டு மீண்டும் மயிலாப்பூர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் மெல்ல மெல்ல நடந்து சென்றதில் மாலை ஆகிவிட்டது. பாட்டு சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரும் அந்த நேரத்திற்கு வந்துவிட்டார். தம்பூராவைப் பார்த்த வாத்தியார் இது பச்சை தம்பூரா... நாதம் கட்டாது எனக் கூறிவிட்டார். நன்கு காய்ந்த பிறகுதான் தம்பூரா கட்ட வேண்டும். ஆனால், பச்சையாக இருக்கும்போது இந்த தம்பூராவை செய்துள்ளதால், இது சரியாக நாதம் கட்டாதாம். அவர்கள் வேண்டாம் எனக் கூறிவிட்டதால் வேறு வழியில்லாமல் அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

காமாட்சி அண்ணனிடம் விஷயத்தைக் கூற, கடுப்பான அவர், இந்த சனியன் வீட்டுலயே இருக்கக்கூடாது என அங்கிருந்த கல்லில் ஓங்கி அடித்தார். தம்பூரா துண்டுத் துண்டாக சிதறியது. அன்று இரவு அந்தக் கோபத்துடனேயே படுக்கச் சென்றார். மறுநாள் காலை உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவரால் நடக்க முடியவில்லை. தோளில் சாயவைத்துக்கொண்டு மெல்லமாக நடத்திக்கொண்டு சென்றோம். மருத்துவமனைக்குள் சென்றதும் “எனக்கு மூத்திரம் வருது” என்றார். ஓர் ஓரத்திற்கு அழைத்துச் சென்று, அவரை சிறுநீர் கழிக்க உட்கார வைத்துவிட்டு, தன்னுடைய புடவையால் சுற்றி நின்று அவரது மனைவி மறைத்துக்கொண்டார். சிறுநீரோடு சேர்ந்து அவர் உயிரும் போய்விட்டது. உடன் வந்தவர்கள் கதறி அழ ஆரம்பித்துவிட்டனர். மருத்துவம் படித்துவிட்டு அங்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த இளம் வயதுடைய மருத்துவர் ஒருவர் வந்து, என்ன என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறினோம். இறந்துவிட்டார் என்று தெரிந்தால் உடலை அறுத்துவிட்டுத்தான் கொடுப்பார்கள். 10 நாட்கள் ஆகிவிடும். நீங்கள் சத்தமே இல்லாமல் ஏதாவது வண்டி ஏற்பாடு செய்து உடலைக் கொண்டு சென்றுவிடுங்கள் என்றார். யாராவது கேட்டால் வண்டி வரும்வரை மயக்கமாக இருக்கிறார் என்றே கூறுங்கள் என்றார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரை மடியில் படுக்க வைத்து பிணத்திற்கு காற்று வீசிக்கொண்டு இருந்தோம். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள்.

முதல் மனைவியுடனான திருமணத்திற்கு வாங்கிய பட்டு வேஷ்டி வீட்டில் இருக்கும். அதை அடமானம் வைத்து பணம் வாங்கிவிட்டு வா என என்னை அனுப்பிவைத்தார்கள். அவசர அவசரமாக எலக்ட்ரிக் ட்ரைனில் ஏறி வீட்டிற்குச் சென்று, அந்த வேஷ்டியை விற்று காசாக்கினேன். அந்தக் காசில்தான் ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து காமாட்சி அண்ணனின் உடலை வீட்டிற்கு கொண்டுவந்தோம். எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், வி.கே. ராமசாமி, கே.ஆர். ராமசாமி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ஒரு கட்டத்தில் யாரும் பிணத்தைத் தூக்க வராததால் எம்.ஜி.ஆர், என்.எஸ். கிருஷ்ணன், வி.கே. ராமசாமி, கே.ஆர். ராமசாமி என நால்வரும் சேர்ந்து பிணத்தைத் தூக்கினர். அரை கிலோமீட்டர் தூரம்வரை சுமந்து அவரது சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டுவந்தனர். உடல் தகனத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எம்.ஜி.ஆர். செய்திருந்தார்.

முதல் மனைவியின் மகள்தான் அவருக்குக் கொள்ளி வைத்தார். எம்.ஜி.ஆர். தன்னுடைய வாழ்க்கையில் சுமந்த ஒரே பிணம் காமாட்சி அண்ணனின் சடலத்தைத்தான். எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையேயான முதல் சந்திப்பும் சுடுகாட்டில் நடந்த இந்த சந்திப்புதான். “நீங்களும் அந்த வீட்டில்தான் இருக்கீங்களா” என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்றவுடன், “அவருக்கு ஏதாவது கடன் இருக்கிறதா” என்றார். “ஆயிரம் ரூபாய்வரை இருக்கிறது” என்றேன். “நாளைக்கு ஆஃபிஸில் வந்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள். முதலில் அந்தக் கடனை அடைத்துவிடுங்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஆஃபிஸில் எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணி இருந்தார். அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வாங்கிவந்து எல்லா கடனையும் அடைத்தேன்.

kalaignanam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe