Skip to main content

அம்மா புகைப்படத்திற்கு முன்னால் நின்று தேவருக்கு எம்.ஜி.ஆர் பண்ணிக்கொடுத்த சத்தியம்!

 

mgr

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நீண்டகாலம் நெருங்கிய நண்பர்களாக இருந்து சிறு மனஸ்தாபம் காரணமாக நட்பை முறித்துக்கொண்ட எம்.ஜி.ஆரும் சாண்டோ சின்னப்பதேவரும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எவ்வாறு இணைந்தனர் என்பது குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"எம்.ஜி.ஆர், குண்டுமணி என்பவரை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சில படங்களில்கூட அவரைப் பார்த்திருப்போம். அவரை நாடகங்களிலும் எம்.ஜி.ஆர் நடிக்க வைப்பார். ஒருமுறை கும்பகோணத்தில் நடந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரும் குண்டுமணியும் இணைந்து நடித்தனர். உடல் முழுவதும் எண்ணெய் தடவிக்கொண்டு எம்.ஜி.ஆருடன் குண்டுமணி சண்டையிடுவது மாதிரியான காட்சியில், குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி அந்தப் பக்கத்தில் எறிவதுபோல எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும். அந்தக் காட்சிக்காக குண்டுமணியை எம்.ஜி.ஆர் தூக்கும்போது எண்ணெய் பிசுபிசுப்பு காரணமாக எம்.ஜி.ஆர் கைநழுவிவிடுகிறது. குண்டுமணி கீழே விழவிருப்பதை நொடி நேரத்தில் சுதாரித்த எம்.ஜி.ஆர், தன்னுடைய காலைக் கொடுத்து தடுக்க முற்படுகிறார். எம்.ஜி.ஆர் காலில் குண்டுமணி விழுந்ததால் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டுவிடுகிறது.

 

கால் முறிந்துவிட்டது... எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பத்திரிகைகள் எல்லாம் எழுதத் தொடங்கிவிட்டன. அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தைத் திரும்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்தான் எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்தார். பத்து நாட்களில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். மூன்று மாதத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அளவிற்கு குணமடைந்துவிட்டார். குணமடைந்தவுடனேயே எம்.ஜி.ஆர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா... நேராக வாகினி ஸ்டூடியோ சென்று குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி ஒரு புகைப்படம் எடுத்தார். நான் குணமாகிவிட்டேன்... என்னால நடிக்க முடியாதுன்னு சொன்ன பத்திரிகைக்கு எல்லாம் இதை அனுப்பிவிடுங்கடா என்றார். அந்தப் புகைப்படமும் பிறகு பத்திரிகையில் வெளியாகி பெரிய அளவில் பிரபலமானது.  

 

வாகினி ஸ்டூடியோ வாசலில் குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு எம்.ஜி.ஆர் நிற்கையில், சாண்டோ சின்னப்பத்தேவர் தன்னுடைய படத்திற்காக பாடல் ரெக்கார்டிங் செய்துவிட்டு வெளியே வருகிறார். தேவரைப்  பார்த்ததும், ‘அண்ணே...’ என எம்.ஜி.ஆர் கூப்பிட, பதிலுக்கு ‘ஏ.. முருகா’ என வந்து எம்.ஜி.ஆரை தேவர் கட்டிப்பிடித்துவிடுகிறார். இருவரது கண்களுமே கலங்கிவிட்டன. ஏழு வருடங்களுக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர். கால் முறிந்தது பற்றி தேவர் எம்.ஜி.ஆரிடம் கேட்க, தேவரின் படத்தயாரிப்பு குறித்து எம்.ஜி.ஆர் கேட்க என இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். தன்னுடைய படத்திற்காக பாடல் பதிவு வேலை நடப்பதாக எம்.ஜி.ஆரிடம் தேவர் கூறினார். நான் அந்தப் பாட்டைக் கேட்கலாமா என எம்.ஜி.ஆர் கேட்க, ‘உனக்கு இல்லாமலா முருகா...’ எனக் கூறி ஸ்டூடியோ உள்ளே அழைத்துச் சென்று, பதிவுசெய்த நான்கு பாடல்களையும் போட்டுக் காண்பிக்கிறார். பாடல்கள் அற்புதமாக உள்ளன எனப் பாராட்டிய எம்.ஜி.ஆர், ஹீரோ யார் என்று கேட்டுள்ளார். தனக்கு தொழில் தற்போது நலிவடைந்துவிட்டது என ஆதங்கப்பட்ட தேவர், கிடைக்குற நடிகர்களை வைத்து படம் எடுப்பதாகக் கூறியுள்ளார். ‘ஏன்... நான் இல்லையா’ என எம்.ஜி.ஆர் கேட்க, தேவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

 

தேவரை கையோடு வீட்டிற்கு அழைத்துச்சென்ற எம்.ஜி.ஆர், தன்னுடைய அம்மா புகைப்படத்தின் முன் நிறுத்துகிறார். ‘சத்தியா அம்மா மேல சத்தியம்மா சொல்றேன்ணா... இனி வருஷத்துக்கு ரெண்டு படம் உங்களுக்கு நான் நடிச்சுக்கொடுக்கிறேன்... கதை, வசனம் எதுலயும் நான் தலையிடமாட்டேன்’ என சத்தியம் பண்ணிக் கொடுக்கிறார். அதேபோல, நான் தொழில்பண்ணுகிற இடத்தில் தம்பி இருக்கக் கூடாது... தம்பி என்று சிவாஜியை குறிப்பிடுகிறார். ‘நான் நடிக்கும்வரை சிவாஜியை வைத்து படம் எடுக்கமாட்டேன் என நீங்களும் சத்தியம் பண்ணிக்கொடுங்கள்’ என்கிறார். தேவரும் சத்தியம் பண்ணிக்கொடுக்கிறார். தேவர் மிகப்பெரிய சிவாஜி ரசிகர்; எம்.ஜி.ஆருக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக சிவாஜியை வைத்து அவர் படம் எடுக்கவேயில்லை. பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக எம்.ஜி.ஆரும் 16 படங்கள் நடித்துக்கொடுத்து தேவரை மிகப்பெரிய கோடீஸ்வரனாக்கினார்".