Advertisment

பாகவதர் படத்தைப் பார்த்துவிட்டு புதுமணத்தம்பதி எடுத்த விபரீத முயற்சி! கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

kalaignanam

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தன்னுடைய இளமைக்காலத்தில் 'அம்பிகாபதி' திரைப்படம் பார்க்கச் சென்ற நினைவுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

ஆண்டிபட்டியிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த கன்னியப்பபிள்ளைபட்டிதான் என்னுடைய தாத்தாவின் சொந்த ஊர். என் அம்மா சிறு வயதிலேயே என்னை அந்த ஊரில் கொண்டுவிட்டுவிட்டார். என்னுடைய தாத்தா வீட்டில்தான் நான் வளர்ந்தேன். கன்னியப்பபிள்ளைபட்டி சுற்றுவட்டாரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றதுபோல விவசாயம் நடக்கும். ஒரு சீசனில் கடலை, ஒரு சீசனில் மிளகாய் பழம் என மாறிமாறி என் தாத்தா விவசாயம் செய்வார். எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஏக்கர் அளவிலான தோட்டத்தில் மிளகாய் பழம் போட்டிருந்தார். அந்த மிளகாய் தோட்டத்தைக் காவல் காப்பது என்னுடைய வேலை. வீட்டிலிருந்து அந்தத் தோட்டத்திற்குத் தினமும் நடந்துதான் செல்வேன். என் வயதை ஒத்த வயதில் மாமா ஒருவர் எனக்கு இருந்தார். நாங்கள் இருவரும்தான் தினமும் தோட்டத்தைக் காவல் காப்போம். காலை, மாலை, இரவு என நாள் முழுவதும் அங்குதான் இருக்கவேண்டும். அந்த வழியாக வருகிறவர்கள் ஒரு கையை வைத்து இழுத்தார்கள் என்றால் ஒரு பை நிறைய மிளகாய் பழத்தை அள்ளிக்கொண்டு சென்றுவிடலாம். அதனால், மிகவும் கவனமாக காவல் காக்க வேண்டும். பின், அறுவடை கட்டத்தை நெருங்கியவுடன் பழத்தைப் பறித்து, காயப்போட்டு எடுத்து, அதை விற்பனை செய்யும் வேலையை என் தாத்தா பார்த்துக்கொள்வார்.

Advertisment

அந்தக்காலத்தில் விவசாய நிலத்தில்தான் ஆட்கள் அதிகமிருப்பதால் அங்கு நேரடியாக வந்து தின்பண்டங்களை விற்பார்கள். பணத்திற்குப் பதிலாக பண்டமாற்று முறையில் கொடுப்பதை வாங்கிக்கொள்வார்கள். நாடார் ஒருவர் கடலைமிட்டாய் விற்றுக்கொண்டு வருவார். நாங்கள் அவரை 'நாடார் அண்ணே... நாடார் அண்ணே' என்றுதான் கூப்பிடுவோம். அவருக்கு மிளகாய் பழம் கொடுத்துவிட்டுக் கடலைமிட்டாய் வாங்கிக்கொள்வோம். ஒரு மிட்டாய் வாங்கி நானும் என் மாமாவும் சரிபாதியாகப் பிரித்துக்கொள்வோம். ஆண்டிபட்டியில் டூரிங் டாக்கிஸில் தினமும் படம் போடுவார்கள். நானும் அவரும் ஆளுக்கு ஒரு நாள் சென்று படம் பார்ப்போம். முதலில் அவர் சென்று பார்ப்பார். படம் நன்றாக இருந்தது என்றால் மறுநாள் நான் சென்று படம் பார்ப்பேன். படம் நன்றாக இல்லையென்றால் நான் போகமாட்டேன். மிளகாய் பழத்தை நாடாரிடம் விற்று அதிலிருந்து கிடைக்கும் காசை வைத்துத்தான் சினிமாவிற்குப் போவோம். சினிமாவிற்கு போகும் நாட்கள் மட்டும் கடலை மிட்டாய் வாங்குவதற்குப் பதில் அவரிடம் காசு வாங்கிக்கொள்வோம். இந்த விஷயமெல்லாம் என் தாத்தாவிற்குத் தெரியாது. அந்தப்பகுதியில் தண்ணியே கிடையாது. கிணற்றில் மிக ஆழத்தில் கிடக்கிற தண்ணியை இறைத்துதான் நீர் பாய்ச்சுவார்கள். அப்படி கஷ்டமான உழைப்பில்தான் அந்த மிளகாய் பழம் விளைகிறது. அதைத் திருட்டுத்தனமாக விற்று சினிமாவிற்கு சென்றால் சும்மாவிடுவாரா? விஷயம் தெரிந்தால் எங்கள் இருவரையும் அடி வெளுத்துவிடுவார்.

எங்கள் தோட்டத்திலிருந்து சற்று தொலைவில் நீரார்பட்டி என்று ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஊருக்கு வெளியே குடிசை போட்டு ஆடு, மாடு வைத்து பால் கறந்து விற்பனை செய்வார். அவர் ஊருக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருந்தன. இது மாதிரியான நிறைய சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன. அந்தக்காலத்தில் எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது. 'வாங்க சாமி' என்று என்னை அவர் கூப்பிடுவார். நான் 'வாங்க அண்ணே...' என்று சொல்லுவேன். அன்று ஒருநாள், எங்கள் தோட்டத்திற்கு வந்த அவர், முந்தைய நாள் அவர் பார்த்த, தியாகராஜ பாகவதர், சந்தானலட்சுமி நடிப்பில் 1937இல் வெளியான 'அம்பிகாபதி' திரைப்படத்தைப் பற்றி எங்களிடம் கூறினார். அம்பிகாபதி திருட்டுத்தனமாகச் சென்று அமராவதியைச் சந்திப்பார். இருவரும் சந்திக்கையில், அமராவதியைக் கையில் தூக்கிக்கொண்டுபோய் கட்டிலில் போடுவார். இருவருக்கும் க்ளோசப் ஷாட் இருக்கும். அப்படியே பாடல் ஆரம்பிக்கும். அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு 'அடடா இப்படியெல்லாம் லவ் பண்ணலாமா' என்று ஜனங்கள் பேசிக்கொண்டனர். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் சென்ற ஒரு புதுமணத்தம்பதி இதுபோல முயற்சி செய்து பார்த்துள்ளது. அந்த ஆண் தன்னுடைய மனைவியை இதுபோல கட்டிலில் தூக்கிப்போட, கட்டில் உடைந்து மனைவிக்கு முதுகெலும்பு உடைந்துவிட்டது. அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் ஓவென்று அலற, பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் கூடிவிட்டனர். பின், அந்தப்பெண்ணைத் தூரத்திலிருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். கிராமத்தில் ஒரு விஷயம் நடந்தது என்றால் காட்டுத்தீ போல பரவிவிடும். 'பாகவதர் மாதிரி பண்றேன்னு சொல்லி பொண்டாட்டி குருக்கெலும்ப உடைச்சுட்டான்' என்று ஊருக்குள் அனைவரும் கேலி பேச ஆரம்பித்துவிட்டனர். படக் கதையோடு சேர்த்து இந்தக் கதையையும் அவர் எங்களிடம் கூறினார்.

அதைக் கேட்டதிலிருந்தே இந்தப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாகிவிட்டது. மறுநாள், கடலை மிட்டாய் கொண்டுவந்த நாடாரிடம் மிளகாய் பழத்தைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரிடம் காசு வாங்கிக்கொண்டோம். அந்தப் படத்தை முதலில் நான் சென்று பார்க்க என் மாமாவும் சம்மதித்துவிட்டார். என் மாமாவைக் காவலுக்கு விட்டுவிட்டு, நான் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்துக்கொண்டு சினிமா கொட்டகைக்குள் சென்று அமர்ந்தேன். படம் தொடங்கிவிட்டது. அந்த கட்டில் சீன் எப்ப வரும் என்று ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்தது. அந்த சீனை பார்த்துவிட்ட சந்தோசத்தோடு தோட்டத்திற்குத் திரும்பினேன். கையில் பெரிய குச்சியுடன் என் தாத்தா அங்கு நின்றுகொண்டிருந்தார். "உனக்கு கஞ்சி ஊத்துறதே பெரிய விஷயம்... நீ சினிமாவுக்குப் போயிட்டு வர்ரீயா" எனக் கூறிக்கொண்டே ஒரு அடி அடித்தார். நான் ஓட ஆரம்பித்துவிட்டேன்... பின்னால் என்னைத் துரத்திக்கொண்டு வந்த அவரால் எனக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. "நீ எங்க போயிருவ... என் ரெண்டு மகனும் வரட்டும்... அவனுகட்ட சொல்லி உன் முதுகுத்தோல உரிக்கச் சொல்றேன்" எனத் திட்டிக்கொண்டே என்னை விரட்டி வந்தார். அந்த சம்பவத்தை இன்றும் என்னால் மறக்கமுடியாது.

kalaignanam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe