Advertisment

யார் என்று கேட்ட வாணி ஸ்ரீ... பழையதை மறக்காமல் வந்து பேசிய விஜயசாந்தியும் ஜெயந்தியும்!

Jayanthi

Advertisment

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகை விஜயசாந்தி குறித்தும் நடிகை ஜெயந்தி குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

பாரதிராஜா கதாநாயகனாக நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் விஜயசாந்தி சில காட்சிகளில் நடித்திருப்பார். அந்தப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அந்தப்படத்தில் நடித்த மற்றவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தபோதிலும் விஜயசாந்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரைச் சினிமாவில் இருந்து ஓரங்கட்டிவிட்டனர். விஜயசாந்தி அப்பா சீனிவாசனும் நானும் நெருங்கிய நண்பர்கள். சீட்டாட்டம் மூலம் எனக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. 'இளஞ்ஜோடிகள்' படத்திற்காக நாங்கள் தயாராகிக்கொண்டு இருந்தோம். படத்தின் பெயருக்கு ஏற்ப இளம் நடிகர்களாகத் தேடினோம். பல கட்டத் தேர்வுகளுக்கு பிறகு, ராதா, விஜயசாந்தி, சுரேஷ், கார்த்தி ஆகிய நால்வரையும் நடிக்க வைத்தோம். நால்வருக்குமே இது இரண்டாவது படம். தமிழில் 'இளஞ்ஜோடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

'இளஞ்ஜோடிகள்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையைக் கைப்பற்றிய தேனிலவு வசந்தி, தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். தமிழைவிட தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தப்படத்தின் ரிலீசிற்குப் பிறகு விஜயசாந்திக்குத் தூங்குவதற்குக்கூட நேரமில்லாத நிலை ஏற்பட்டது. அவருக்கென தனி மார்க்கெட் உருவானது. ஒரு காலத்தில் கே.ஆர்.விஜயா நடித்திருந்தால் உடனே படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கிக்கொள்வார்கள். தெலுங்கில் அதுபோன்ற அந்தஸ்தை விஜயசாந்தி பெற்றார்.

Advertisment

அந்தக்காலத்தில் ஏ.வி.எம் மற்றும் வாகினி ஸ்டூடியோக்கள்தான் பெரிய ஸ்டூடியோக்கள் என்பதால் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கூட இங்கு நடைபெறும். என்னுடைய படத்தின் படப்பிடிப்பும் அங்குதான் நடந்துகொண்டிருக்கும். அங்குப் படப்பிடிப்பிற்கு விஜயசாந்தி வந்தால் என்னைச் சந்திக்காமல் செல்லமாட்டார். ஒருமுறை அவரது படத்திற்கான ஷாட் எடுத்துக்கொண்டிருக்கும்போது, நான் அந்த வழியாக சென்றுகொண்டிருந்தேன். உடனே, கட் சொல்லிவிட்டு 'கலைஞானம் சார்...கலைஞானம் சார்...' என என்னை நோக்கி ஓடிவந்தார். என் கையில் முத்தம் கொடுத்துவிட்டு என் குடும்பத்தினர் பற்றி நலம் விசாரித்தார். 'இளஞ்ஜோடிகள்' படத்திற்காக நளினியைத்தான் முதலில் புக் செய்திருந்தேன். அவர் அப்பா கேட்டுக் கொண்டதால்தான் விஜயசாந்தியை ஒப்பந்தம் செய்தேன். "ஷாட்ல இருக்கும்போது இப்படி ஓடிவராதம்மா... நான் வேணும்னா நிக்கிறேன்" என்பேன். "சும்மா இருங்க சார்... நீங்க இல்லனா நான் இவ்ளோ பெரிய ஆளாகியிருப்பேனா" என்பார். சினிமாவில் எல்லாரிடமும் நன்றியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், விஜயசாந்தி பழையதை மறக்காமல் நன்றியுணர்வுடன் வந்து பேசினார். "கதையாசிரியர், கேமரா மேன்லாம் யாருன்னு தெரியாது... யார் அவங்க" என என் கதை மூலம் நாயகியாக அறிமுகமாகிய வாணி ஸ்ரீ ஒருமுறை கேட்டுவிட்டார். நான் அவரை குறை கூறுவதற்காக இதைக் கூறவில்லை. அதேபோல இன்னொரு சம்பவத்தையும் கூறுகிறேன்.

நடிக்க வாய்ப்புத்தேடி சென்னை வந்த நடிகை ஜெயந்தி, தேனாம்பேட்டையில் குடியிருந்தார். ஒருநாள் நான் வேலை பார்த்த கம்பெனிக்கு படவாய்ப்பு தேடிவந்தார். தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லை என அந்தப் பெண்ணிடம் கூறிய இயக்குநர் ராமதாசன், அவரது அட்ரஸை வாங்கிக்கொள்ளும்படி என்னிடம் கூறினார். பின், அந்தப்பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வீடு எங்கிருக்குனு பார்த்துட்டுவா என்றார். அவரது வீட்டிற்கு அருகே சென்றபோது இரு ரவுடிகள் குடிபோதையில் வந்து ஜெயந்திக்குத் தொந்தரவு கொடுத்தனர். "நாங்களே இந்த ஊருக்கு புதுசு சார்... இப்படித்தான் டெய்லி தொந்தரவு கொடுக்குறாங்க சார்... வேற எங்கையாவது வீடு இருந்தா வாடகைக்கு பாத்துக்கொடுக்க முடியுமா சார்..." என ஜெயந்தியின் அம்மா என்னிடம் கேட்டார். உடனே, சூளைமேட்டில் ஒரு வீடு வாடகைக்குப் பார்த்து அன்று இரவே அவர்கள் அந்த வீட்டில் குடியேற உதவினேன். ஜெயந்தியை வளர்த்தவர் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் ஜெயந்தியைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்தார். இவர்தான் நமக்கு வீடு பார்த்துக் கொடுத்தது என அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார். அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளும்படியும் அவரை எனக்குத் தெரிந்த படக்கம்பெனிகளில் அறிமுகம் செய்துவைக்கும்படியும் என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்படியே சில நாட்கள் கடந்தன. ஒருநாள், "எனக்குத் தமிழ் பேச மட்டுமே தெரியும் சார்... எழுத, வாசிக்கத் தெரியாது... எனக்குத் தமிழ் சொல்லித்தர முடியுமா" என்று ஜெயந்தி என்னிடம் கேட்டார். பின்பு, அவருக்குத் தமிழ் எழுதப்படிக்க நான் கற்றுக்கொடுத்தேன். ஜெயந்திக்கு கற்பூர புத்தி. மிக விரைவிலேயே தமிழ் எழுத, வாசிக்கக் கற்றுக்கொண்டார். அதன் பிறகு, சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என பெரிய இடத்தை அடைந்துவிட்டார். சில ஆண்டுகள் பிஸியாக நடித்த அவர், ஓர் இயக்குநரின் மகனைத் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். என்னை எங்கு பார்த்தாலும் வந்து பேசிவிட்டுச் செல்வார். அவர் கணவரிடம், நான்தான் தமிழ் எழுத, வாசிக்க கற்றுக்கொடுத்தேன் எனக் கூறி என்னை அவருடைய 'குரு' என அறிமுகப்படுத்தினார். எங்குப் பார்த்தாலும் 'குருகார்' என்றுதான் என்னை அழைப்பார். விஜயசாந்திபோல ஜெயந்தியும் பழையதை மறக்காமல் நன்றியுணர்வுடன் நடந்துகொண்டார்.

kalaignanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe