/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/200_33.jpg)
நக்கீரன் ஸ்டூடியோவில் ஒளிபரப்பாகும் ‘பொக்கிஷம்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக திரையுலகைச் சேர்ந்த பலர் தங்களின் அனுபவங்களைப் பேசி வருகின்றனர். அந்த வகையில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் தன் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
கலா மாஸ்டர் பேசுகையில், “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நான் பணியாற்றியபோதுமறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், என்னிடம் உன்னுடைய திறமைக்கு நான் எப்போதுமே சல்யூட் அடிப்பேன் என்பார். நான் செய்த ஒரு நடன ஷோவின் டைட்டிலை அவர் பரிந்துரைத்தார். இந்த டைட்டிலா? என்று முதலில் நான் நினைத்தேன். நான் இப்படி நினைத்ததை யாரோ கலைஞரிடம் சொல்லியிருக்கின்றனர். அதற்கு அவர் நான் வைத்த டைட்டில் உனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னியாமே? என கேட்டார். அதற்கு நான் ஐயோ அப்பா நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்றேன். ஒளிபரப்பான அந்த ஷோவில் மெசேஜ் தரும் வகையில் அமைந்த எபிசோட்களை பார்த்து பாராட்டுவார். கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசுவார். அவரிடன் வாழ்த்து வாங்குவது சாதாரண விஷயம் கிடையாது. அவரிடம் நான், உங்களை நம்பி எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அதனால் நீங்கள் கடவுள் மாதிரி என்பேன். அதற்கு கடவுளா! என்று ஆச்சர்யத்துடன் கேட்பார். அப்போது நான் எனக்கு நீங்கள் கடவுள் மாதிரிதான் என்பேன். நான் பங்காற்றிய அந்த ஷோவுக்கு அவர் டைட்டில் வைத்ததோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பாராட்டி வந்தார். அந்த ஷோ முடிந்து பல வருடம் ஆனாலும் மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு காரணம் கலைஞர் வைத்த பெயர்தான்” என்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி கலா மாஸ்டர் பேசும்போது, “எனக்கு ஜெயலலிதாவின் தைரியம் ரொம்ப பிடிக்கும். என்னுடைய திருமணத்திற்கு வளையல் கொடுத்துள்ளார். அதை மறக்க மாட்டேன். பெண்களை எப்போதுமே பாராட்டக்கூடியவர். காவல்துறையில் பதக்கம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது, அந்த நிகழ்ச்சியில் காவலர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்க வேண்டி இருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்த பிறகு என்னை மேடையில் ஏற்றி விருது கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கொடுத்தார்கள். அதன் பின்பு அனைத்து ஷோக்களுக்கும் என்னுடைய பெயரை அவர் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து அகில இந்திய தடகள விளையாட்டு நிகழ்ச்சியில் பத்தாயிரம் பேரை நடனமாட வைத்தேன். அதைப் பாராட்டி ஜெயலலிதா எனக்கு கோல்டு மெடல் கொடுத்தார். அவரின் வீட்டு அருகில் நான் இருந்தபோது, முதலமைச்சர் மாதிரி இல்லாமல், வா பா... எப்படி இருக்க? என்று அன்பாக பேசினார். என்னுடைய நடன ஷோக்களை பார்த்து நல்லா பண்ணி இருக்கிறீர்கள் என்று சொன்னார். எனக்கு கண் கலங்கிவிட்டது. அவர் முதலமைச்சராக இருந்தபோது வீரப்பன் ஷோ கூட பண்ணியிருக்கிறேன். அவருடைய வீட்டு அருகில் இருந்தது எனக்கு பாதுகாப்பாக இருந்தது. அவர் மறைந்தது எனக்கு மிகவும் ஷாக்காக இருந்தது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)