சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையால் உலகம் முழுக்க வீட்டை விட்டு வெளியேறவே மக்கள் யோசிக்கின்றனர். கரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும் என்று அரசாங்கம் அறிவுரை செய்துள்ளது.
இதனால் தினசரி வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் கேப் ட்ரைவர் ஒருவரின் வாழ்க்கை கரோனா தாக்கத்தால் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளது என்று நடிகை காஜல் அகர்வால் ஷேர் செய்துள்ளார்.
அதில், “கடந்த 48 மணிநேரத்தில் நீங்கள்தான் முதல் சவாரி என்று கேப் ட்ரைவர் அழுதுகொண்டே சொன்னார். அவருடைய மனைவி, இன்றாவது மளிகை பொருட்கள் வாங்கி வருவார் என எதிர்பார்ப்பதாக கேப் ட்ரைவர் சொன்னார். இந்த வைரஸானது பல வழிகளில் நம்மைத் தாக்கும் அதைவிட தினசரி சம்பாதியத்தை நம்பி இருப்பவர்களை இன்னும் கடுமையாகத் தாக்கியுள்ளது. நான் அந்த ட்ரைவருக்கு 500 ரூபாய் கொடுத்தேன். கண்டிப்பாக நம்மில் பலருக்கு அதிகப்படியாக செய்வது என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது அதனால் அதை நிறைய செய்வோம். தன்னுடைய கடைசி வடிக்கையாளருக்காக 70 கிமீ பயணம் மேற்கொண்டதை எனக்கு காண்பித்தார். தயவு செய்து கேப் ட்ரைவர்களுக்கு, சிறு குறு வியாபாரிகளுக்கும் பணம் கொடுப்பதிலிருந்து கொஞ்சம் அதிகமாக கொடுங்கள். நீங்கள் அவர்களுடைய அந்த நாளின் கடைசி வாடிக்கையாளராக கூட இருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவானது சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்படும் ஒன்றாக இருக்கிறது.