பிரபல நடிகை காஜல் அகர்வால், தமிழில் கடைசியாக கமல் நடித்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் இவரது போர்ஷன்கள் இடம் பெறவில்லை. பார்ட் 3-க்கான லீடில் மட்டும் இடம் பெற்றிருந்தார். அதனால் ‘இந்தியன் 3’ படத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படத்தை அடுத்து இந்தியில் சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் தோன்றியிருந்தார். பின்பு தெலுங்கில் ‘கண்ணப்பா’ படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றியிருந்தார். இப்போது பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணா’ இந்தி படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகவர்வால் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த, அவர், “எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து கூற மாட்டேன். அது வேறு களம்” என்றார். மேலும் விஜய் குறித்து பேசிய அவர், “விஜய்யுடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகை” என்றார்.
தொடர்ந்து தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, “மிக விரைவில் நடிப்பேன்” என பதிலளித்தார். பின்பு கோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு, “பெரிய வித்தியாசங்கள் இல்லை. மிகவும் கிரியேட்டிவாகவும் தொழில்முறையாகவும் இரண்டு துறைகளுமே இருக்கிறது. நான் தென்னிந்தியாவில் இருந்து என்னுடைய கரியரை தொடங்கியதால் கோலிவுட் என்னுடை மனதில் ஸ்பெஷல் இடத்தில் இருக்கிறது” என்றார். மேலும் அவர் குறித்து சமீபத்திய வதந்தி குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “வதந்திகளில் நான் கவனம் செலுத்துவதில்லை” என்றார்.