நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் பயணிக்கும் துல்கர் சல்மான், கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து ‘காந்தா’ மற்றும் ‘ஆகாசம் லோ ஓகா தாரா’ ஆகிய படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இன்னும் தலைப்பிடப்படாத அவரது 41வது படத்தை வைத்துள்ளார். தயாரிப்பாளராக கடைசியாக ‘லோகா சாப்டர் 1; சந்திரா’ படத்தை தயாரித்திருந்தார். இதில் கேமியோவாகவும் தோன்றியிருந்தார். கல்யாணி பிரயதர்ஷன் நடித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியை பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தை அடுத்து அவர் நடித்து வரும் ‘காந்தா’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
காந்தா படத்தில் துல்கர் சல்மானை தவிர்த்து சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸை இயக்கியவர். இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஜானு சாந்தர் இசையமைக்கிறார். 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் இத்திரைப்படம் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘லோகா’ படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருவதால் அவர் நடிப்பில் நாளை(12.09.2025) வெளியாகவிருந்த ‘காந்தா’ படம் தள்ளி போகிறது. இது தொடர்பாக துல்கர் சல்மான் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதில் இருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம்.
எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம். மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவைத் வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம். இதற்காக காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் தள்ளிபோவதால் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
A little delay for a bigger experience❤✨#kaantha
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 11, 2025
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha#DulquerSalmaan#RanaDaggubati#SpiritMedia#DQsWayfarerfilms#Bhagyashriborse#SelvamaniSelvaraj#Kaanthafilmpic.twitter.com/jCk0owOyED