Advertisment

k rajan about lokesh kanagaraj

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக்சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது, "நான் ஆண்டுக்கு 60 திரைப்பட ஆடியோ விழாக்களில் கலந்து கொள்கிறேன். இது ஒரு வித்தியாசமான விழா. இங்கே சமூகத்திற்காகப் போராடுபவர்கள் பலரும் வந்துள்ளார்கள். இந்தச் சமூக விரோதி படத்தில் இரண்டு நாள் தான் ஷூட்டிங் என்றார்கள். ஆனால் என்னை நன்றாக வேலை வாங்கி விட்டார்கள்.பெண்டு நிமிர்த்தி விட்டார்கள். படத்தில் என்னைக் குத்திக் கொன்று விடுவார்கள். செத்த பிறகும் மறுபடியும் சாவு என்றனர்.

இப்படி ஐந்து முறை சாக விட்டு எடுத்தார்கள். எத்தனை முறை சாவது என்றேன். அந்த அளவிற்கு நேர்த்தியாக எடுக்க முயற்சி செய்பவர்கள் இவர்கள். இன்று பெரிய ஹீரோக்கள் 10 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு இயக்குநர் வளர்ந்த பிறகு தங்களுக்குத் தான் இயக்க வேண்டும் என்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்று ஒருபடத்தை இயக்கினார். அது மாதிரி தயாரிப்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பாரா? கொடுக்கமாட்டார். சிறிய தயாரிப்பாளர்களைப் பரிசோதனை எலிகளைப் போல அவர்கள் பயன்படுத்துகிறார்கள். புதிய இயக்குநர்கள் சின்ன தயாரிப்பாளர்களிடம் தங்கள் திறமையை நிரூபித்து விட்டு, வெற்றி பெற்றுவிட்டு வந்த பிறகு தங்கள் படங்களை இயக்க வேண்டும் என்று பெரிய கதாநாயக நடிகர்கள் நினைக்கிறார்கள். இன்று சமூக விரோதிகள் பட்டியலில் யார் இருக்கிறார்கள்? லஞ்சம் வாங்குபவன், அடுத்தவன் சொத்தை அபகரிப்பவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் சமூக விரோதி படம் மக்களால் வரவேற்கப்படும்'' என்றார்.