ADVERTISEMENT

"உங்களால் தண்டனை பெற்றவன் நான்தான்" - ஜெய் பீம் அந்தோணி சாமியை சிறையில் சந்தித்த அனுபவம் கூறும் கே.பாலகிருஷ்ணன்! 

06:46 PM Jan 05, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சென்னை மாவட்ட குழு சார்பில் ஜெய்பீம் கலைஞர்கள் மற்றும் களப்போராளிகளைப் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "இந்தப் படத்தில் நடித்தவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் தமிழரசன் தன்னுடைய முழு நடிப்பையும் காட்டியுள்ளார். நடிப்பு, வசனம், இசை, கலை வடிவம் என அனைத்தும் சிறப்பாக இருப்பதால்தான் ஜெய் பீம் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அந்தோணி சாமியாக தமிழரசன் நடித்திருந்தார். அந்தோணி சாமியை ஒரே ஒருமுறை நான் நேரில் பார்த்திருக்கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடத்தியதாக எங்களைக் கைது செய்து கடலூர் மாவட்டத்திலுள்ள சிறையில் சென்று அடைத்தனர். சிறையில் இருந்த மூன்றாவது நாள் சிறையிலிருக்கும் ஒருவர் என்னை சந்திக்க வேண்டும் என்று தோழர்களிடம் கேட்டிருக்கிறார்.

சிறையில் யார் நம்மை சந்திக்க வேண்டும் என்கிறார் என்ற ஆச்சர்யத்துடன் வரச் சொல்லுங்கள் என்றேன். ஒருவர் வந்தார். சார் என்னை தெரிகிறதா என்றார். நான் தெரியவில்லை என்றவுடன் ராஜாக்கண்ணு வழக்கில் உங்களால் சிறைக்கு அனுப்பப்பட்ட அந்தோணி சாமி நான்தான் என்றார். என்னிடம் நிறைய விஷயங்கள் பேசிய அவர், காவல்துறையின் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்றும் விவரித்தார். இத்தனை நாளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும்; இத்தனை நாளுக்குள் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் யாரையாவது பிடித்து குற்றவாளியாக்க வேண்டிய வேலையை நாங்கள் செய்கிறோம் என்றார்.

கடைசியாக போகும்போது ஒரு விஷயத்திற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் சார் என்றார். நான் என்ன விஷயம் என்று கேட்டவுடன், நான் ஜெயிலுக்கு வரவில்லை என்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்திருப்பேன். 24 மணி நேரமும் என்னால் போதை இல்லாமல் இருக்க முடியாது. ஜெயிலுக்கு வந்த பிறகு அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்றால் ஜெயிலுக்கு வந்ததுதான் அதற்கு காரணம் என்றார்" எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT