Advertisment

“அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு... தடை செய்ய வேண்டும்”- ஜோதிகா படத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

கடந்த ஜூலை 4ஆம் தேதி ஜோதிகா அரசுப்பள்ளி ஆசிரியையாக நடித்து வெளியான படம் ராட்சசி. இந்த படத்தை புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்க, எஸ்.ஆர். பிரபு தயாரித்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் அரசுப்பள்ளிகளையும், அரசு ஆசிரியர்களையும் தவறாக சித்தரிப்பதுபோல உள்ளது என கூறி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

jyothika

அதில், “ஜூலை 5ஆ ம் தேதி ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி திரைப்படம் அரசுப்பள்ளிகளை சீர்த்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப்பூசுகிறது. அரசுப்பள்ளியினை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாக உள்ளதால் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்வதோடு படத்தை தடைசெய்ய வேண்டும்.

முற்போக்குப் போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி. அரசுப் பள்ளி குப்பை அங்கு வேலைசெய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள் எப்போது போவார்கள் என்று தெரியாது. ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார்கள் பல்வேறு தொழிலில் ஈடுபடுகிறார்கள் உள்ளிட்ட தவறான வசனங்களை எழுதியுள்ளனர்.

Advertisment

இதன்மூலம் அரசுப்பள்ளியினையும், ஆசிரியர்களையும் இழிவுப்படுத்தி பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களைப் பதிவு செய்வதன் மூலம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன் வருவார்கள்.

இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயற்சியே, ஆசிரியர்களின் உரிமை போராட்டங்களை ஒடுக்கி ஜனநாயகத்தின் குரல்வலையை அறுப்பதாக வசனங்களை இயக்குநர் கெளதம்ராஜ், பாரதிதம்பி புனைந்திருக்கிறார்கள்.

கல்வியின் தரம் குறித்து அரசுக்கு ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை அறியாமல் எதுவுமே தெரியாமல் போலி முற்போக்குக்கு ஏன் ஆசிரியர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள்?

கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்துறையை தனியார் மயமாக்குவதற்கு வக்காலத்து வாங்குவதாக உள்ளது இந்தப்படம். ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக ராட்சசி ஜோதிகாவும், சாட்டை சமுத்திரகனியும் முனைவது வரவேற்புக்குரியது.

அதே நேரத்தில் ஒரு ஆசிரியரை உயர்வாக காட்டி ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகளையும் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இரைப்பது எவ்விதத்தில் நியாயம்? எல்லா மனிதர்களையும் போலவே இந்த அமைப்பிற்குள் சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையை சரிவர செய்யாமல் இருக்கலாம் அதை கண்டிக்க வேண்டியது மறுப்பதற்கில்லை ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது போல படம் முழுவதும் காட்டப்படுவது கண்டனத்திற்குரியது.

அரசுப்பள்ளிகள் 56,000 பள்ளிகள் இயங்குகின்றன. மிகப்பெரிய நெட்வொர்க். குறிப்பாக அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அடுத்தவேளை உணவுக்காகப் போராடும் பெற்றோரின் குழந்தைகள். பெற்றோர்களே இல்லாத குழந்தைகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் குழந்தைகள், முறையாக உணவு உடை இருப்பிடம் இல்லாதவர்களின் குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள்.

இந்த குழந்தைகளைத்தான் அரசுபொதுத் தேர்வில் 490/500 எடுக்க செய்வது அரசு ஆசிரியர்களே. ஆசிரியர்பணி அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில் ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். முறையான அங்கீகாரமின்றி இயங்கிய தனியார் பள்ளியில் 94 குழந்தைகள் தீயில் கருகியதே இனி நடக்காமல் தடுத்திட இரக்கமுள்ள எந்த இயக்குநரும் தடுத்திட, படம் எடுத்திட வரவில்லை.

இப்போதும் 2000ஆக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறதே மருந்துக்குகூட அதுப்பற்றி படத்தில் வசனமில்லையே. முற்போக்கு சிந்தனைப்படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை? அரசுப்பள்ளியின் கல்வித்தரமும் ஆசிரியர்களின் அறப்பணியும் நேரில் சென்று பார்த்தால் தெளிவாகப்புரியும்.

அரசுப்பள்ளிகளை இழிவுப்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள ராட்சசி படத்தினை தடைசெய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தங்களுடைய கண்டனம் தெரிவித்துள்ளது.

ratchasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe