பிரபல தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், கடைசியாக இந்தியில் ஹிரித்திக் ரோஷனுடன் ‘வார் 2’ படத்தில் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிர்சாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ‘டிராகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர். தனது உடலை மேம்படுத்துகிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆர், படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூனிய என்.டி.ஆர். தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “விளம்பர படப்பிடிப்பின் போது ஜுனியர் என்.டி.ஆருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையின் பேரில், அவர் முழுமையாக குணமடைய இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்கவுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, யாரும் கவலைப்பட வேண்டாம். மற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.