பிரபல சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜாய் கிரிசில்டாவுக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதில் ஜாய் கிரிசில்டா தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த மாதம், காவல் ஆணையரகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை என புகார் அளித்த 10 நாட்களுக்கு பிறகு முதல்வர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினரை டேக் செய்து எக்ஸ் பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வருகிறார்.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ், தன் மீது ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்துகள் பரபரப்புவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதே போல் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது ‘நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்ப்பு படுத்தி பேசக்கூடாது, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கும் அந்த வழக்கோடு இணைக்கப்பட்டு 24ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, ஜாய் கிரிசில்டாவிடம் தங்களது அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டது. அவரிடம் திருமணம் செய்தது குறித்தும், கருகலைப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்வி அடிப்படையில் துணை ஆணையர் வனிதா 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்த பின் ஜாய் கிரிசில்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நானும் மாதம்பட்டியும் இரண்டு வருஷமா ஒன்னா வாழ்ந்திருக்கோம். அப்போது நடந்த எல்லா விஷயத்தையும் விவரமா சொல்லியிருக்கேன். அதுக்கு தான் இவ்ளோ நேரம் ஆகிடுச்சு. எனக்கு பாசிட்டிவா ரிப்ளை கொடுத்திருக்காங்க. இதுக்கப்புறம் அவர் மேல கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பாங்க.
இந்த விவகாரம் தொடர்பா யூட்யூப்ல பேசுற ஆட்களுக்கு ஒன்னு சொல்லிக்குறேன். ஒரு பொன்னு வந்து நின்னுட்டா அவள என்னா வேணா பேசலாம்னு நீங்க எழுதுறீங்க. இதுனால என்னை போல பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில வர பயப்படுறாங்க. நான் கர்ப்பமா இருக்கேன். என்னைய பத்தி தப்பா எழுதுற எல்லா யூட்பர்ஸுக்கும் சொல்றேன், இந்த குழந்தையோட சாபம் உன்ன சும்மா விடாது. உங்க வீட்லையும் ஒரு பெண் இருப்பாங்க. நாளைக்கு அவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டா அப்ப நீங்க என்ன பன்னுவீங்க. அதனால அப்படி எழுதாதீங்க. அது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகுது. ஒரு பொண்ண பத்தி அவ்ளோ சொல்றீங்க. ஆனா ஏன் ஒரு ஆம்பளையப் பத்தி பேச மாட்டிக்குறீங்க” என்றார்.