‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் மூலம் கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். பின்பு கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் இப்போது வரை வெளியாகவில்லை. இதனிடையே சமையல் கலைஞராக புகழ் பெற்றவர். முன்னணி படங்களின் வெற்றி விழாக்கள், திரை பிரபலங்களின் வீட்டு விழாக்கள் என தொடர்ச்சியாக தனது கேட்டரிங் சர்வீஸ் மூலம் சமையல் செய்து வருகிறார். இதனிடையே சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்.
கோவையைச் சேர்ந்த இவர், ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, கடந்த மாதம் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மேலும் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவர் ஏற்கனவே ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்பு திடீரென்று கோயிலில் எளிய முறையில் மாதம்பட்டி ரங்கராஜை கரம் பிடித்தது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியது. முதல் மனைவி ஸ்ருதியை மாதம்பட்டி ரங்கராஜ் முறையாக விவாகரத்து செய்தாரா, இருவருக்கும் எப்போது திருமணம் நடந்தது என்ற கேள்விகள் உலா வந்தது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கணவன் மனைவியாக எங்கள் பயணத்தை தொடங்கினோம் என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்தார். மேலும் இந்தாண்டு குழந்தையை வரவேற்கத் தயாராகிறோம் என்றும் கூறியிருந்தார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த விவகாரம் குறித்து இன்னும் பேசவில்லை.
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ், பங்கேற்றார். அப்போது அவர் அருகில் ஸ்ருதியும் அமர்ந்திருந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக, அதில் இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தாலும் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ளாதபடியும் பேசிக்கொள்ளாதபடியும் இருந்தனர். இந்த வீடியோ வைரலானதும் ஜாய் கிரிசில்டா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடைய கணவர் என்பதை குறிக்கும் வகையில் கர்ப்பமான நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளதை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜாய் க்ரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடம் தொடர்பில் இல்லை. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவர் தான் அப்பா. நான் ஏழு மாதம் கர்ர்பிணியாக இருக்கிறேன். அவரை கல்யாணம் செய்து கொண்டு அப்பார்ட்மெண்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தேன். ஸ்ருதியுடன் பிரிந்து தனியாக இருப்பதாக சொல்லி என்னை கல்யாணம் செய்தார். ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. என்னால் முடிந்த எல்லா வழியிலும் தொடர்பு கொண்டேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கும் என் குழந்தைக்கும் இப்போது பதில் தெரிய வேண்டும்” என்றுள்ளார்.