‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் மூலம் கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். பின்பு கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் இப்போது வரை வெளியாகவில்லை. இதனிடையே சமையல் கலைஞராக புகழ் பெற்றவர். முன்னணி படங்களின் வெற்றி விழாக்கள், திரை பிரபலங்களின் வீட்டு விழாக்கள் என தொடர்ச்சியாக தனது கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார். இதனிடையே சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். 

கோவையைச் சேர்ந்த இவர், ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை ஜாய் கிறிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிறிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அண்மையில் திருமணம் நடந்துள்ளதாக கோயிலில் மணக்கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியது. முதல் மனைவி ஸ்ருதியை மாதம்பட்டி ரங்கராஜ் முறையாக விவாகரத்து செய்தாரா, திருமணம் ஆனதை தெரிவித்தவுடன் கர்ப்பமாக இருப்பதையும் ஜாய் கிறிசில்டா தெரிவித்துள்ளதால் இருவருக்கும் எப்போது திருமணம் நடந்தது என்ற கேள்விகள் உலா வந்தது. 

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா, ஏற்கனவே ஜோதிகா நடித்த  ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்குடன் திருமணம் நடைபெற்றது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்பு திடீரென்று கோயிலில் எளிய முறையில் மாதம்பட்டி ரங்கராஜை கரம் பிடித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை சுற்றி எழுந்த கேள்வி ஒன்றிற்கு ஜாய் கிறிசில்டா விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில பயணங்கள் அமைதியாகத் தொடங்குகின்றன, ஆனால் நம்பிக்கையுடன் வளர்கின்றன, ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கணவன் மனைவியாக எங்கள் பயணத்தை அன்பு, கண்ணியம், முழு மனதுடன் மற்றும் மரியாதையுடன் தொடங்கினோம். இந்தாண்டு குழந்தையை வரவேற்கத் தயாராகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.