உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
கரோனாவின் பிடியில் பல பிரபலங்களும் சிக்கித் தவித்து,இரண்டு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், உலகளவில் பிரபலமான ஹாரிபாட்டர் நாவல்களை எழுதிய ஜே.கே. ரௌலிங், கரோனா அறிகுறிகள் தமக்கு இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.மேலும், டாக்டர் ஒருவரின் அறிவுரையைப் பின்பற்றியதால் எந்தவித பரிசோதனை செய்யாமலே அந்த அறிகுறிகளிலிருந்து குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், “கரோனா அறிகுறிகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று குயின்ஸ் மருத்துவமனையிலிருந்து பேசும் இந்த மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள். கடந்த இரண்டு வாரங்களாகக் கோவிட்-19 வைரஸின் அனைத்து அறிகுறிகளும் எனக்கு இருந்தன.நான் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை.இந்த மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றினேன்.தற்போது முற்றிலுமாகக் குணமடைந்துள்ளேன்.இவர் சொன்ன முறை மிகவும் உதவியது.எந்தப் பக்க விளைவுகளும் இல்லாத இந்த முறையை உங்கள் அன்புக்குரியவர்களிடம் சொல்லுங்கள்.அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.