Skip to main content

‘கதை கேட்டு பாராட்டினவர், வேறொரு படம் ஹிட்டானதும் யார் நீன்னு கேட்டார்’ - இயக்குநர் வேதனை 

Published on 23/05/2025 | Edited on 23/05/2025
jinn movie director shared a incident one hero rejected his script

டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜின் -தி பெட்’. இப்படத்தில் ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படம் காமெடி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தை டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன. மே 30ஆம் தேதியன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்வில் பேசிய இயக்குநர் டி.ஆர். பாலா, இந்த படக் கதையை ஒரு ஹீரோவிடம் சொல்லி அவர் அவமானப்படுத்திவிட்டார் என ஒரு சம்பவத்தை பகிர்ந்தார். அவர் பகிர்ந்ததாவது, “இந்த படத்தின் கதையை முதலில் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி ஓ.கே. வாங்கி பின்பு ஒரு ஹீரோவிடம் கதை சொன்னேன். கதையை கேட்ட அவர், சூப்பரா இருக்கு, எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க, நான் பார்த்த 5 பெஸ்ட்டு டைரக்ரகளில் நீங்களும் ஒருவர்னு பாராட்டினார். உடனே அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு எல்லாமே நல்லபடியாக அமைந்தது. பின்பு அந்த ஹீரோ என்னிடம் இந்த கதையில் தனக்கு உண்டான ஸ்டைலில் சில மாற்றங்களை செய்யலாம் என சொன்னார். நானும் அதற்கு ஓ.கே. சொல்லிவிட்டேன். அப்போ அப்போ அவர் கூப்பிட்டு சில மாற்றங்களை சொன்னார். நானும் மாற்றிவிட்டேன். இப்படியே இரண்டு வருஷம் கடந்துவிட்டது. பின்பு தயாரிப்பாளரிடம் கேட்டபோது, அந்த ஹீரோ பெரிய ஆர்டிஸ்ட், நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னார். நானும் பொறூமையா இருந்தேன். 

இப்படி போய்கிட்டு இருக்க, அந்த ஹீரோவுக்கு அவர் நடிச்ச படம் ஒன்னு ரிலீஸானது. அது சூப்பர் ஹிட்டடிக்க நானும் தயாரிப்பாளரும் அவரிடம் உடனே நம்ம பட ஷூட்டிங்கை ஆரம்பிக்கனும்னு டேட் வாங்க போனோம். ஹீரோ தங்கியிருந்த ஹோட்டலை சொன்னால் யார் அவர்னு நீங்களே கண்டுபுடுச்சிடுவீங்க. அவர் ரூமுக்குள் போனோம், அவர் அந்த சூப்பர் ஹிட் படத்தை நினைத்து வெற்றிகளிப்பில் உட்காந்திருந்தார். உள்ளே போனதும் தயாரிப்பாளரை உட்கார சொன்னார். என்னை சொல்லவில்லை. பதிலாக நீங்க யார் என கேட்டார். நான் உங்களுக்கு கதை சொன்ன டைரக்டர் என எல்லாத்தையும் சொன்னேன். பின்பு கதையை திருப்பி முதலில் இருந்து சொல்லுங்க என சொன்னார். நானும் முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை எல்லாத்தையும் சொன்னேன். சொல்லும் போது இடையில் நிறுத்தி சில சீன்களை மாத்த சொன்னனே... மாத்தீட்டீங்களான்னு கேட்டார். நானும் மாத்திட்டேன்னு சொன்னேன். அவர் சொல்லும் போதே அவருடைய உடல்பாவனை எல்லாமே மாறியிருந்தது. முன்பு இருந்தது போல் இல்லை. என்னுடன் படம் பண்ணக்கூடாது என்ற முடிவில் அவர் இருக்கிறார் என்பது எனக்கு தெரிந்தது. 

கதை சொல்லும் போது ஒரு இடத்தில் நிறுத்தி நடித்து காண்பிக்க சொன்னார். நானும் நடித்து காண்பித்தேன். பின்பு படத்தில் இரண்டு கதாபாத்திரம் இருப்பதால் இரண்டு கதாபாத்திரம் போலவும் நடித்து காண்பிக்க சொன்னார். இரண்டு கதாபாத்திரம் போல் எப்படி நடித்து காண்பிக்க முடியும் என்று நான் கேட்ட போது நடித்து காமியுங்க என மீண்டும் சொன்னார். நானும் சரின்னு, இரண்டு கதாபாத்திரமாகவும் நடித்து காண்பித்தேன். உடனே அவர் மனசுக்குள்... என்ன இதையும் பண்ணிட்டான், வேறு எதாவது சொல்லுவோம் என வேறு ஒன்னு செய்ய சொன்னார். அதை என்னால் செய்ய முடியவில்லை. அவர் வெளிபடையாகவே உன்னுடன் படம் பண்ண விருப்பமில்லைன்னு சொல்லியிருக்கலாம். ஆனால் உனக்கு சினிமா தெரியாது, நீ கிளம்புன்னு... தயாரிப்பாளர் முன்னாடி அவமானப்படுத்திட்டார். நானும் முதலில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லி உங்கக்கூட ரெண்டு வருஷமா ட்ராவல் பண்ணிருக்கேன், அஞ்சு பெஸ்ட் டைரக்டர்ல நீ ஒன்னுன்னு சொன்னீங்க, ஆனா இப்ப இப்டி சொல்றீங்களேன்னு கேட்டேன். அவர் இல்ல இந்த கதையில் நான் நடிக்கல, அப்புறமா பன்றேன்னு அனுப்பி விட்டார். கீழ வந்ததும் என்னை அழைச்சிட்டு வந்த தயாரிப்பாளர் அந்த ஹீரோ டேட் கிடைச்சா பன்றேன், இல்லைன்னா பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார். டீ - நகரில் இருந்து ஆதம்பாக்கத்தில் இருக்கும் என் வீடு வரை நடந்தே போனேன். என் கண்ணில் தண்ணி ஊத்திட்டே இருந்தது. எக்காரணத்தை கொண்டும் இந்த படத்தை விடக்கூடாது, கண்டிப்பா பண்ணனும் என முடிவெடுத்தேன். அதே மாதிரி படம் எடுத்து முடித்துவிட்டேன். அதற்கு எனக்கு நம்பிக்கையாக இருந்தது விஜய் சார் சொல்லிக்கொடுத்த எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விஷயம்” என்றார். 

சார்ந்த செய்திகள்