/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/145_6.jpg)
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ஸ்வீட் பிரியாணி குறும்படமும் திரையிடப்பட்டன.
திரையிடல் நிகழ்வுக்கு பிறகு இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மியும் ஸ்வீட் பிரியாணி நாயகன் ப்ராங்க்ஸ்டர் ஆர்.ஜே. சரித்திரனும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அந்த சந்திப்பில் படம் குறித்து இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி பேசுகையில், "நான் பார்த்த பல விஷயங்களின் தொகுப்புதான் இந்தப் படம். ஒரு தமிழ் பத்திரிகையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை படித்தேன். அபார்ட்மெண்டில் தனிமையில் வசிக்கும் முதியவர் ஒருவர், தன் வீட்டிற்கு கொரியர் டெலிவரி செய்ய வரும் பையனை சிறிது நேரம் இருந்து தன்னிடம் பேசுமாறு கூறுவார். அதற்கு அவர் பணம் கொடுக்கவும் தயாராக இருப்பார். அதை படிக்கும்போதே எனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. இந்தக் கதைக்காக கொரியர் டெலிவரியை உணவு டெலிவரி என்று மாற்றினேன். இதை படமாக எடுக்கப்போகிறேன் என்ற விஷயத்தை அந்த எழுத்தாளரிடம் செல்வதற்காக தொடர்பு கொண்டபோது, ஆந்தாலஜி படத்திற்காக இந்தக் கதையை படமாக்க சமீபத்தில்தான் ஒருவர் அனுமதி பெற்றதாக கூறினார். அவர்கள் அந்தக் கதையை படமாக்கியும்விட்டனர். அதனால் உணவு டெலிவரி பாயின் ஒருநாளை மையமாக வைத்து படமாக்க முடிவெடுத்தோம். நம் நாட்டில் ஆடம்பர உணவு என்பது பலருக்கு சாதாரண விஷயம். அதே நேரத்தில் உணவு என்பதே சிலருக்கு ஆடம்பரமான விஷயம். இந்த இரு வேறான விஷயங்களை ஒன்றாக்கி ஒரு கதை எழுதினேன். நாயகன் மாரிமுத்து பையில் உணவை எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் பைக்கில் பயணம் செய்வான். அவன் நாள் முழுவதும் பசியோடு சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை சந்திப்பான். ஆனால், அவனால் அந்தக் குடும்பத்திற்கு உதவ முடியாது. இதுதான் படத்தின் மையம்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)