Jayam Ravi changed his name to ravi mohan

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி, 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (14-01-25) திரைக்கு வரவிருக்கிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் உருவான இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போதும் எவ்வித மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில், தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.

Advertisment

இந்த நாள் தொடங்கி, நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும் என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டு வர உதவும். என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ‘ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக’ மாற்றப்படுகிறது. இது, நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்வமான முயற்சி.

Advertisment

தமிழ் மக்கள் ஆசியுடன், என் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும் புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் பனிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களது ஊக்கம் தான், எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும், உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம்’ எனத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எனப் பதிவிட்டுள்ளார். தன்னுடைய முதல் படமான ஜெயம் படத்தின் வெற்றியால் இவருக்கு ஜெயம் ரவி என்று அடைமொழி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.