சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராஜேஷ்.எம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது அவர், இயக்கி வரும் படம் பிரதர். இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பாடலின் உரிமையை ‘திங் மியூசிக்’ ஆடியோ வாங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ‘ஜீ தமிழ்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ‘மக்காமிஷி’ என்ற பாடல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘வாட் இஸ் மக்காமிஷி?’ என்ற போஸ்டரை பகிர்ந்திருந்தார். இதையடுத்து இப்பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். ஜாலியான மோடில் இப்பாடல் அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ‘ஹசிலி ஃபிசிலி...’, ‘நாணி கோணி...’ என்று கவனம் ஈர்க்கும் பாடல் வரிகள் இடம்பெற்றது. அந்த வரிசையில் இந்த ‘மக்காமிஷி’ பாடலும் அமைந்துள்ளது.