படம் ஓடிடி-யில் வெளியீடு! உருக்கமான அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி!

Jayam Ravi

இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ளபடம் 'பூமி'. இது நடிகர் ஜெயம் ரவிக்கு 25-ஆவது படமாகும். இப்படத்தில் அவருக்குஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மே 1-ம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர, அப்படத்தின் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் திட்டமிட்டார். கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காரணமாகப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், படத்தை ஓடிடி-யில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. பின்னர் படத்தை தீபாவளியன்று சன் டிவியில் வெளியீடு செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

ஜெயம் ரவியின் 25-ஆவது படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு, தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. இந்தநிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த தகவலை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். அதன்படி, பூமி படமானது பொங்கல் தினத்தன்று டிஸ்னி-ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

இது குறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது நீண்ட திரைப்பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால்‌ ஆனது. நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப்பெரும்‌ நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்‌தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்றக் காரணம்‌. எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்‌. உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெறச் செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாகப் பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன்‌.

'பூமி' திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌கல்‌. இப்படம்‌ எனது திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதைத்தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்கமான படம்‌. கோவிட்‌-19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங்களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களுடன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத்தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக்கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது.

Disney + Hotstar உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்,‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங்களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தைப் பார்த்து, பண்டிகையைக் கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்தப் பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களைச் சந்திப்பதை, ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்‌" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

jayam ravi
இதையும் படியுங்கள்
Subscribe