jayam ravi aarthi divorce case update

ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என சமீபத்தில் மாற்றிக் கொண்டார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த செப்டம்பரில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து ஆர்த்தி, வெளியிட்ட அறிக்கையில் ரவி மோகனின் விவாகரத்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அவரின் இந்த முடிவு, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்றும் கூறியிருந்தார். இதனிடையே ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சமரச தீர்வு மையத்தில் ரவி மோகனும் ஆர்த்தியும் பல முறை ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச தீர்வு எட்டப்படாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமரச தீர்வு மையத்தில் மத்தியஸ்தர் முன்னிலையில் ரவி மோகம் மற்றும் ஆர்த்தி இருவரும் மீண்டும் ஆஜராகினர். முன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது நேரில் ஆஜரான அவர்கள் இந்த முறை காணொலி வாயிலாக ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்குமிடையே சமரச பேச்சு முடிந்த பின்னர் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்து பிப்ரவரியில் 15ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Advertisment