/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/271_11.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் நடிகர்கள் ரஜினி, விஜய், தனுஷ் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார். இவர் நடனம் அமைத்த அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே...' என்ற பாடலுக்காக தேசிய விருது இவருக்கு கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் ஜானி மாஸ்டர் மீது 21 வயது நிரம்பிய அவரது உதவி நடன பெண் கலைஞர் பாலியல் புகார் கொடுத்தார். கடந்த 2019ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்பு சென்ற இடங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் ஜானி மாஸ்டரின் மனைவியும் அதற்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார், முதல் முதலாக ஜானி பாலியல் தொல்லை கொடுத்த போது, அப்பெண்ணுக்கு 16 வயது என்பதால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்தனர்.
இதனிடையே நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் அவர் திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் தற்காலிக தடை விதித்தது. மேலும் அவர் உறுப்பினராக இருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து ஜானி மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் சைதராபாத் போலீசார் கடந்த மாதம் அவரை கைது செய்தனர். இதையடுத்து ஜானியின் மனைவி ஆயிஷா, இந்த பாலியல் புகாரை மறுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், கலந்துக்கொள்ள ஜானிக்கு, ரங்காரெட்டி நீதிமன்றம் 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால் திடீரென அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டது. கடந்த 8ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேசிய விருது வழங்கப்படும் விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறையில் ஜானி இருக்கும் நிலையில், அவரது சார்பில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசரணைக்கு வந்த போது நிபந்தனை ஜாமீன் ஜானிக்கு வழங்கி உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராகவேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொள்ள முயற்சிக்க கூடாது, வெளிநாடு தப்பிச் செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)