பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரம் சுந்தரி’. தினேஷ் விஜன் தயாரித்துள்ள இப்படத்தை துஷார் ஜலோட்டா இயக்கியுள்ளார். சச்சின் – ஜிகர் இருவரும் இசை பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் படம் வருகின்ற 29ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. 

Advertisment

ட்ரெய்லரை பார்க்கையில், டெல்லியை சேர்ந்த நாயகனுக்கும் கேரளாவை சேர்ந்த நாயகிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்ப்பதாக தெரிந்தது. ட்ரைலரின் இறுதியில் மலையாளம் என்றால் மோகன்லால், தமிழ்நாடு என்றால் ரஜினிகாந்த், ஆந்திரா - தெலுங்கானா என்றால் அல்லு அர்ஜூன், கர்நாடகா என்றால் யஷ் என ஜான்வி கபூர் பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அதே சமயம் ட்ரெய்லரின் ஆரம்பத்தில் சர்ச்சில் நாயகனும் நாயகியும் ரொமான்ஸ் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது தற்போது கிறிஸ்துவர்கள் சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. 

வாட்ச்டாக் அறக்கட்டளை எனும் பெயர் கொண்ட அமைப்பு, கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, அக்காட்சியினை படத்தில் இருந்து மட்டுமல்லாமல், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அதன் விளம்பரப்படுத்தும் செயல்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி நீக்க தவறினால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, மும்பை காவல்துறை, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே படத்தில் நாயகி கதாபாத்திரம் மலையாளி என்பதால் நன்கு மலையாளம் தெரிந்த கேரள நடிகையை ஏன் தேர்வு செய்யவில்லை என மலையாள நடிகை பவித்ரா மேனன் கேட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளத்தில் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.