திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 97வது ஆண்டு ஆஸ்கர் விழா இந்தாண்டு நடந்து முடிந்தது. இதில் 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதையடுத்து 2025ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கு அடுத்த ஆண்டு நடக்கும் 98வது ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்படவுள்ளது. 

Advertisment

ஆஸ்கர் விழாவில் ஆங்கில மொழி திரைப்படங்களை தவிர்த்து சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் மற்ற நாட்டு மொழி படங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தங்களது நாட்டின் அதிகாரப்பூர்வ படம் என ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து இந்தியில் உருவாகியுள்ள ‘ஹோம்பவுண்ட்’(Homebound) படத்தை அனுப்ப தேர்வு செய்துள்ளனர். 

ஹோம்பவுண்ட் படம் தர்மா புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இதில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கியுள்ள இப்படத்திற்கு அமித் த்ரிவேதி பாடல்களுக்கும் நரேன் சந்திரவர்கர் மற்றும் பெனடிக்ட் டெய்லர் ஆகியோர் பின்னணி இசைக்கும் இசையமைத்துள்ளனர். 2020ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அந்த கட்டுரை தேசிய காவலர்கள் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிக்கும் இரண்டு பால்ய நண்பர்களைப் பற்றி விவரிக்கிறது. இப்படம் கடந்த மே மாதம் கேன்ஸ் விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.