james vasanthan brahmin issue

Advertisment

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சமூகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அவரது கருத்தை பகிர்ந்து வருகிறார். அதில் சில கருத்துக்கள் பேசுபொருளாகி சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சனம் செய்திருந்த நிலையில் அது சர்ச்சையைக் கிளப்பியது.

அந்த வகையில் ஜேம்ஸ் வசந்தன் தற்போது குறிப்பிட்டுள்ள கருத்து புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் குறிப்பிட்டிருந்த பதிவில், "நகைச்சுவையாளர் பாஸ்கி பேசிய ஒரு காணொளிபகுதியை ஒருவர் அனுப்பியிருந்தார். பார்த்தேன், சிரித்தேன். அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. மாறாக, ஒரு உண்மையை நினைவூட்டியது என்றே சொல்லலாம். 'க்ரியேட்டிவிட்டியில் பிராமணர்தான் சுப்ரீம் கம்யூனிட்டி' என்கிறார் பாஸ்கி. அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்குபவர் பெரும்பாலும் பிராமணரே. இது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே? அதை அவர் சொல்லும்போது எந்த அடிப்படையில் மறுக்கமுடியும்? ஏன் மறுக்கவேண்டும்? எனக்கு வேகமாக ஓடும் திறமை இருக்கவேண்டும், அல்லது அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னை விட வேகமாக ஓடக்கூடியவனை நான் எப்படிக் குற்றப்படுத்த முடியும்? குறுக்கே வந்து இடைமறிப்பவனையோ, தள்ளிவிட்டு ஓடுபவனைப் பற்றியோ நான் பேசவில்லை. அவன் யாராயிருந்தாலும் தப்பானவன் தானே" என குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்த பதிவின் மூலம் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு விளக்கம் அழைத்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "பொதுத்தளத்தில் இவ்வளவு அகன்ற, ஆழமான விஷயத்தை எல்லாரும் புரிந்துகொள்ளும், ஏற்கும் விதத்தில் ஒரே பகிர்வில் எழுதிவிட முடியாது. நான் பகிர்ந்தது ஒரு பரிமாணம். அது நேர்மறையானது. அதனால் எதிர்மறைப் பக்கங்களே இல்லையென நான் சொல்வதாக பலர் கற்பனை செய்துகொண்டதற்கு நான் பொறுப்பாக முடியாது. வர்ணாசிரம அடிப்படையில் நம் மக்களை தரம் பிரித்து, அவர்களுக்கு எல்லா சமூக உரிமைகளையும் மறுத்த உண்மைகளை ஏதோ நான் மறந்து விட்டது போலப் பேசிக்கொண்டிருக்கிறீர் சிலர். அது பல நூற்றாண்டுக் கோபம் என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ரொம்ப நல்லவர் போல பலர் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். எத்தனை பேர் உங்கள் வீடுகளில் இன்று சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருக்கிற மக்களை உங்கள் வீட்டில் உங்களோடு உங்கள் உணவு மேசையில் அமர்ந்து உணவருந்த வைப்பீர்கள் - மனதுக்குள் எந்தக் கிலேசமும் இல்லாமல்? கோயிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே, ஊருக்குள் வரக்கூடாது என்கிறார்களே.. அதை ஆணையிடுகிறவரெல்லாம் என்ன பிராமணரா? இங்கு கருத்துப் பதிவிடும் பலர் சாதிவெறிக்குள் உழல்பவர்தானே? நீங்கள் எப்படி மற்றவரை விமர்சிக்க முடியும்?" என சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்.