/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/238_13.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாகக் குற்றம்சாட்டி படத்தை தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த நிலையில், மனுவில், ஜெயிலர் திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். இந்த திரைப்படத்தில் மிக மோசமான, படு பயங்கரமான வன்முறை காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான அந்த சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது.
வில்லன் கதாபாத்திரம், கூலிப்படையினரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சுத்தியலால் அடித்துக் கொல்வது போலவும், கதாநாயகன், ஒருவரின் தலையை துண்டாக வெட்டுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களின் பற்களை அகற்றினார் என்ற குற்றச்சாட்டில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, இந்த படத்தில், திகார் சிறையில் ஜெயிலராக இருக்கும் ரஜினிகாந்த் தண்டனை கைதியின் காதை துண்டிப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளன.
சினிமா என்பது மக்களை மிக எளிதில் கவர்ந்து விடும். அப்படி இருக்கும்போது, இந்த படத்தைப் பார்க்கும் இளைஞர்கள், குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம் தான் உண்டாகும். எனவே, ஜெயிலர் படத்தை திரையிடத்தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)