
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை சைனியை ஒரு மர்ம நபர் ஏமாற்ற முயன்றுள்ளார். இது குறித்து பகிர்ந்த சைனி, “என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. நடிகர்களை தேர்வு செய்யும் ஏஜென்சி மூலம் எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்க நடிகர்களைத் தேடி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பின்பு என்னிடம் நடிகர் சங்க உறுப்பினர் கார்டு இருக்கிறதா எனக் கேட்டனர். மலையாள சினிமாவில் அப்படிப்பட்ட கார்டு இல்லை என்று சொன்ன போது அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறினர். பின்பு சுரேஷ் குமார் என்ற நபர் என்னை அழைப்பார் எனக் கூறினர்.
இரண்டு நாள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் சேலை கட்டிக் கொண்டு வீடியோ கால் மூலம் நேர்காணலுக்கு வருமாறு சொல்லப்பட்டது. பின்பு சுரேஷ் குமார் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரஜினிகாந்தின் மனைவி கதாபாத்திரத்திற்காக உங்களை தேர்ந்தெடுத்துள்ளோம் எனக் கூறினார். ஏற்கனவே அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருவதால் எனக்கு சற்று குழப்பம் வந்தது. இது குறித்து அந்த நபரிடம் கேட்ட போது, உடனே ஜெயிலர் 2 இல்லை, வேறொரு படத்திற்கு அழைக்கிறேன் என்றார். பின்பு நடிகர் சங்க உறுப்பினர் கார்டு பெற்றுத்தருவதாகக் கூறி மின்னஞ்சலில் அதற்கான விண்ணப்ப கடிதம் அனுப்புவதாகவும் அதற்காக ஆதார் கார்டு விவரம் மற்றும் புகைப்படங்கள் அன்னுப்புமாறு கேட்டார்.
நானும் விவரங்களை அனுப்பிய போது உடனடியாக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். அப்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. பின்பு இது குறித்து விசாரிக்க தமிழில் முன்பு நடித்த மாலா பார்வதி மற்றும் லிஜோ மோலிடம் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் வேறொரு நடிகரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, படத்தில் நடிக்க உறுப்பினர் கார்டு தேவையில்லை எனக் கூறினார். பின்பு தான் இது மோசடி எனத் தெரியவந்தது. இது போன்ற மோசடிக்குப் பலர் ஆளாகியுள்ளனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.