Skip to main content

ரசிகர்களை அலறவைத்த லாக்கப் சீன் - 'ஜெய் பீம்' அனுபவம் பகிரும் சுபத்ரா!

Published on 06/11/2021 | Edited on 09/11/2021

 

 Actress Subathra

 

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'ஜெய் பீம்' திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியானது. நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பினரால் 'ஜெய் பீம்' திரைப்படம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், படத்தில் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுபத்ராவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"தியேட்டர் ஆர்டிஸ்ட்டா இருந்த எனக்கு சினிமாவில் முதல்படம் என்றால் 'கபாலி'தான். ரஞ்சித் சார் அந்த வாய்ப்பைக் கொடுத்தார். முதல் வாய்ப்பே சூப்பர் ஸ்டார் படத்தில் என்பது பலருக்கும் கிடைக்காத ஒன்று. அதன் பிறகு, 'பரியேறும் பெருமாள்' உட்பட அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. நான் 'கர்ணன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஞானவேல் சார் ஆஃபிசில் இருந்து ஃபோன் வந்தது. நான் அவருடைய ஆஃபிசிற்கு நேரில் சென்றபோது என்னுடைய கதாபாத்திரம் பற்றி விளக்கி கூறினார். அதைக் கேட்டவுடனேயே நிச்சயம் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கப்போகிறோம் என்பது பற்றி எந்த ஐடியாவும் இல்லை. இந்தக் கதையில் நடிப்பதற்காக ஒரு வொர்க் ஷாப் இருந்தது. அதற்காக அந்த மக்களுடன் ஒரு வாரம் தங்கியிருந்தோம். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி நிறைய பகிர்ந்துகொண்டார்கள். அங்கிருந்த ஒரு அக்காவின் உடல்மொழி, வீட்டு வேலை செய்யும் முறை, விறகு தூக்கிக்கொண்டு செல்வது, அவர் எப்படி பேசுகிறார் என அனைத்தையும் கவனித்து உள்வாங்கினேன். அவர்களுடன் நெருங்கிப் பழகும்போதுதான் அவர்களுக்குள் எவ்வளவு சோகம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது. 

 

பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்குள் நுழைவது எவ்வளவு சிரமமாக இருந்ததோ, அதைவிட சிரமமாக இருந்தது அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியேறுவது. லாக்கப் சீன் எடுக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தோடு மிகவும் ஒன்றிப்போய்விட்டேன். அந்தக் காட்சியில் அரை நிர்வாணமாக நடித்ததில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை. ஞானவேல் சார் கதை சொல்லும்போதே, நீங்கள் நடிக்கும் கதாபாத்திரம் உண்மையில் இதைவிட பல மடங்கு கொடூரத்தையும் வன்முறையையும் எதிர்கொண்டார் எனக் கூறினார். அதனால் அதை எப்படி திரையில் கொண்டுவர போகிறோம் என்ற கேள்விதான் எனக்குள் இருந்தது..." எனக் கூறினார்.

 

சுபத்ராவின் முழுமையான பேட்டி...

 

 

சார்ந்த செய்திகள்