ADVERTISEMENT

"ஜெய் பீம் - 2 நிச்சயமாக உருவாகும்" - இணை தயாரிப்பாளர் பேச்சு

06:34 PM Nov 29, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. அதில் இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. 'கிடா' எனும் படம் ஃபிலிம் ஃபோக்கஸ் பிரிவிலும் 'குரங்கு பெடல்' மற்றும் சூர்யாவின் 'ஜெய் பீம்' படம் பனோரமா பிரிவிலும் திரையிடப்பட்டது.

அப்போது நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், 'ஜெய் பீம்' பட இயக்குநர் ஞானவேல் மற்றும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பேசினார்கள். ஞானவேல் பேசுகையில், "ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்வு. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ‘ஜெய்பீம்’ படத்திற்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கிடைத்த கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது. அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக சுருக்கப்பட்டுள்ளார்.

‘ஜெய்பீம்’ படத்திற்காக சாதிப் பாகுபாடு, சட்ட அமலாக்கம் மற்றும் நீதி பரிபாலனத்தில் உள்ள குறைகள் பற்றி பல நூற்றுக்கணக்கான கதைகளைக் கேட்டேன். அநீதிக்கு எதிராகப் போராட அரசியல் சாசனம்தான் உண்மையான ஆயுதம். அதையே தான் படத்தில் சித்தரித்துள்ளேன். செய்யாத குற்றத்திற்காக ராஜாக்கண்ணு கைது செய்யப்படுவதிலிருந்து திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைப் பிரதிபலிக்கிறது.

கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெறும்போது தான் என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும்" என்றார். இதைத் தொடர்ந்து பேசிய ஜெய் பீம் பட இணை தயாரிப்பாளர் ராஜசேகர், “நீதிபதி சந்துரு இதுபோன்று பல வழக்கைக் கையாண்டுள்ளார். அதனால் ஜெய் பீம் 2 படம் நிச்சயம் உருவாகும்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT