
53வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெறும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 20- ஆம் தேதி முதல் நவம்பர் 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் எந்தெந்த திரைப்படங்கள் திரைப்படவுள்ளன, எத்தனை திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திரைப்பட விழாவில் 45 படங்கள் திரையிடப்பட்டு கவுரவிக்கப்படுகின்றன. இதில், 20 ஆவணப் படங்களும், 25 கமர்ஷியல் திரைப்படங்களும் அடங்கும். ஆவணக் குறும்பட பட்டியலில் நவீன்குமார் முத்தையா இயக்கி தமிழில் வெளிவந்த 'லிட்டில் விங்ஸ்' திரைப்படம் தேர்வாகியுள்ளது. கமர்ஷியல் திரைப்படங்கள் பட்டியலில் தமிழில் இருந்து சூர்யாவின் ஜெய்பீம், கிடா, குரங்கு பெடல் ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.
சூரரைப் போற்றைத் தொடர்ந்து, ஜெய்பீம் படமும் பல்வேறு விருதுகளை குவித்து வரும் நிலையில் அதனை மேலும் அங்கீகரிக்கும் வகையில் திரையிடப்படவுள்ளது. இதனால் ஜெய்பீம் படக்குழுவினர் மட்டுமின்றி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.