
நயன்தாரா நடித்து ஹிட்டடித்த படம் 'டோரா'. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். இவர் இப்போது 'இயக்கி' என்கிற குறும்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகடிவான பக்கங்களை மட்டுமே இது வரை காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி வரும் படங்கள் வெளியாகும் நிலையில் ஷானின் 'இயக்கி' குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான். அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லியுள்ளது. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை இப்படம் சொல்கிறது. இப்படத்தின் போஸ்டரை தம்பி ராமையா, பா.ரஞ்சித், விஜய் சேதுபதி ஆகியோர் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து இயக்குனர் ஷான் பேசும்போது...
"இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன். 500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தை கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன். பட்டம் படித்து விட்டு உணவு உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் அவர்களது வலியை சொல்லி மாளாது. கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களுக்கான வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு. மனிதாபிமானம் என்ற ஒன்றையே மறந்து போய் விட்டார்கள். இப்படியே போனால் அடுத்த தலை முறை அடிமை வாழ்க்கைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தானே உண்மை. உண்மையை ஊரறிய சொல்லி இருக்கிறேன். இயக்கி மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு நல்ல நல்ல படங்களில் நடிக்கனும். நல்ல நடிகன்னு பேர் எடுக்க வேண்டும் இது தான் என் ஆசை" என்றார்.