
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான திரு. ஐசரி கே. கணேஷ் ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களுக்கு உணவும், புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இன்று கரோனா தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கில் தலைக்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ். இவர் சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக, ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.