/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/babil-khan.jpg)
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தோனியாக நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இந்தி சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமாகி, அதன்பின் பாலிவுட்டில்நடிகராக வலம் வந்தார். இவர்கடந்த ஜூன் 14ஆம் தேதி தனது பாந்த்ரா இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் ‘நெபோடிஸம்’தான் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் நெபொடிஸத்தில் சுசாந்த் சிங் மரணத்தை பயன்படுத்தாதீர்கள் என்று நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்னும் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஈடுபாடு மிக்க இரண்டு மனிதர்களை நாம் இழந்துவிட்டோம். ஈடுபாட்டுடன் இருப்பதே நமது ஆன்மீக பயணத்தின் திறவுகோல். சுஷாந்த் இந்த உலகை விட்டு புறப்பட்டுச் சென்றவிதம் அதிர்ச்சியளிக்கிறது. இயற்கையாகவே நாம் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ பழியை சுமத்தி விடுகிறோம். இது பயனற்றது. ஏனெனில் மன அமைதிக்காக அடுத்தவர் மீது பழி சுமத்துவது நேர்மையான அமைதியாக இருக்கமுடியாது. அது ஒரு பொய்மையின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு யார் மீதும் பழி சுமத்த வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். காரணங்களை ஆராய வேண்டாம் ஏனெனில் அது இழப்பில் வாடுபவர்களை மேலும் நம்பிக்கை இழக்க வைக்கும்.
அதற்கு பதில் அந்த மனிதர்களின் வளர்ச்சியை கொண்டாடி, அவர்களுடைய ஞானத்தை நம் பயணத்தில் வெளிப்படுத்தி, அவர்களுடைய நினைவுகளின் சிறிய விளக்குகளை நம்முடைய ஆன்மாக்களில் ஏற்றுவோம்.
நல்லவற்றுக்கு துணை நில்லுங்கள் ஆனால் அதற்கு சுஷாந்தின் மரணத்தை துணைக்கு கொள்ளாதீர்கள். வாரிசு அரசியலை எதிர்க்க விரும்பினால் செய்யுங்கள், ஆனால் அதற்கு சுஷாந்தை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)