Skip to main content

மாற்றம் செய்தும் பயனில்லை - ஆஸ்கர் ரேசில் வெளியேறிய இந்திய படம்

Published on 18/12/2024 | Edited on 18/12/2024
indias official entry laapataa ladies out of oscars 2025 race

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம்(Best International Feature Film) பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து இந்தாண்டு பாலிவுட் படமான ‘லாபடா லேடீஸ்’(Laapataa Ladies) பரிந்துரைக்கப்பட்டது.  

இந்தப் படத்தை இயக்குநர் கிரண் ராவ் இயக்கியிருந்தார். அமீர் கான் இணைத் தயாரிப்பாளராக தயாரித்திருந்த நிலையில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ராம் சம்பத் இசையமைத்திருந்தார். திருமணமான இரண்டு இளம் பெண்கள், தங்கள் கணவரின் வீட்டிற்கு செல்லும் போது இரயிலில் ஆள்மாறி சென்ற நிலையில் பின்பு தங்களது கணவரிடம் சென்றார்களா இல்லையா என்பதை காமெடி, அரசியல் நையாண்டி கலந்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 1 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆஸ்கர் விருது போட்டியில் இப்படம் கலந்து கொள்வதால் உலகளவில் பார்வையாளர்களை கவருவதற்காக ‘லாபடா லேடீஸ்’ என்ற தலைப்பை ‘லாஸ்ட் லேடீஸ்’(Lost Ladies) என மாற்றி படக்குழு புரொமோஷன் செய்தது. இந்த நிலையில் ஆஸ்கர் 2025 போட்டிக்கான தகுதிச்சுற்று பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 15 படங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் நிலையில் லாஸ்ட் லேடீஸ் படம் இடம் பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கர் ரேசில் இருந்து இந்தாண்டும் இந்தியா வெளியேறியுள்ளது.  

ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சார்ந்த இயக்குநர் சந்தியா சூரியின் ‘சந்தோஷ்’ படம் ஆஸ்கர் தகுதி சுற்றில் இடம்பெற்றுள்ளது. இப்படம் இங்கிலாந்து நாட்டின் சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தில் இந்தி நடிகைகள் ஷஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியில் உருவான இப்படம் இந்தாண்டு நடந்த கேன்ஸ்  திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு தற்போது திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தகுதிச்சுற்று பட்டியலை தொடர்ந்து இறுதிசெய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வெளியிடப்படும். அதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்