
தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உக்ரைன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷாப்கா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் 'பிரின்ஸ்' படக்குழுவினர் நேற்று (17/10/2022) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "இந்தப் படத்தை தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய ரிலீஸ் கொடுத்த அன்பு அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வார்த்தைக்கும், அன்புக்கும் ரொம்ப, ரொம்ப நன்றி அண்ணா. நீங்கள் நிறைய படங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். எத்தனையோ வருடங்கள் இண்டஸ்ட்ரீயலில் இருக்கிறீர்கள். உங்களுடைய வெற்றிப் படங்கள் வரிசையில் எனது படமும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பிரின்ஸ் படத்தை பொறுத்த வரைக்கும் மிக சிம்பிள் ஆன ஸ்டோரி. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணை லவ் பண்ணுகிறான். ஆனால், படத்திற்குள் அனுதீப் கொடுத்திருக்கின்ற காமெடிக்கான ட்ரீட்மெண்ட் தான் நாங்கள் புதுசாக பார்க்கக் கூடிய விஷயம். இப்படத்தில் நாங்கள் ஒரு ஊரைக் காட்டியுள்ளோம். அந்த ஊர் தமிழ்நாட்டில் கிடையாது. அது இவராக உருவாக்கிய ஊர். அந்த ஊர் எப்படி இருக்கும்; மக்கள் எப்படி இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே நாம் பேசுவதுதான் சரி என்று நினைக்கக்கூடிய ஆட்கள். அதில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோவுடைய அப்பா, அவனுக்கு அவன் ஊரில் இப்படி ஒரு லவ். இதனால் அந்த ஊரில் ஏற்படக்கூடிய பிரச்சனை. இதை ஜாலியாக பிரசண்ட் பண்ண வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த படக்குழுவின் முயற்சி.
படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. தீபாவளிக்கு குடும்பத்துடன் திரையரங்கத்துக்கு வந்து ஜாலியாகப் படம் பார்த்து ஜாலியாக வீட்டுக்குப் போகிற மாதிரிதான் படத்தை கிரியேட் செய்துள்ளோம். கலர்ஃபுல், ஃபன் ஜாலியான படம். அத்துடன், கார்த்தி நடித்த சர்தார் படம் வருகிறது. வெவ்வேறு ஜானரில் இரண்டு படம். மிகப்பெரிய பண்டிகைக்கு வருகிறது. சர்தார் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். மித்ரன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இரண்டு படமும் வெற்றி படமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.