
ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் முக்கியமானது கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’. 22 வருடங்களுக்கு பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். ’இந்தியன் -2’படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கி நடந்து வந்தது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கமல், அவ்வப்போது முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திருவல்லிக்கேணியில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.
இதன்பின்னர், கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். நான்காம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஷங்கர் வெளியிட்டுள்ள இப்படத்தின் புதிய போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.