/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shankar_8.jpg)
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரும் அடுத்தாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியன் 2 விவகாரம் தொடர்பாக லைகா தரப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், 'இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 80 சதவிகித பணிகளை மட்டுமே ஷங்கர் நிறைவு செய்துள்ளார். எனவே, எஞ்சியுள்ள படத்தை நிறைவுசெய்து கொடுக்க ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியன் 2 படத்தை நிறைவு செய்யும் வரை பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஷங்கருக்கு சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்ட 40 கோடியில் 14கோடியை அவருக்கு ஏற்கனவே வழங்கிவிட்டதாகவும், எஞ்சியுள்ள 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தத் தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பு தெரிவித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் படம் இயக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)