இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், இந்தியன் 3 அதாவது மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், ஒரு சின்ன கேள்வி மட்டும் பலருக்கும் எழுந்தது. அது என்னவென்றால், கடந்த 1996ஆம் ஆண்டி ‘இந்தியன்’ படம் வெளியான போது, அதில் ஒரு காட்சியில் சேனாபதி (இந்தியன் தாத்தா) கதாபாத்திரத்தின் பிறந்த ஆண்டு 1918ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டிருக்கும். அப்படியென்றால், தற்போது வெளியாகவுள்ள இந்தியன் 2 படத்தில் சேனாபதியின் வயது 106 என இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தாத்தா எப்படி இப்படி சண்டை போடுகிறார் என்று டிரெய்லர் வெளியான போது பலருக்கும் கேள்வி எழுந்தது.
இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு ஷங்கர் பதிலளித்தார். அதில் அவர் “சீனாவில் லு ஜிஜியான் என்ற வர்மக்கலை தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். அவருக்கு 120 வயது. அவர் இந்த வயதிலும் வர்மக்கலை செய்துகொண்டு தான் இருக்கிறார். இந்த சேனாபதி கதாபாத்திரத்திற்கும் வர்மக்கலை தெரியும். உணவு வழக்கம், யோகா, மெடிடேஷன் என அனைத்தையும் சரியாகச் செய்தால் வயது ஒரு விஷயமே கிடையாது” என்று விளக்கம் அளித்தார். ஷங்கர் பதிலளித்த போதிலும், இந்தியன் தாத்தாவின் வயது தொடர்பான அந்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே தான் இருந்தது.
இந்த நிலையில், அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் படக்குழு, இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பாபி சிம்ஹா சீனாவில் வாழ்ந்து வரும் லு ஜிஜியான் நபரை பற்றி விளக்கி சேனாபதி கதாபாத்திரத்தோடு இணைத்துப் பேசுகிறார். மேலும், சேனாபதி கதாபாத்திரம் ஒரு வேளை மட்டும் உணவு உண்பதாகவும், அவர் சண்டை பயிற்சியில் சிறந்து விளங்குவார் என்றும் கூறுகிறார்.