
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேசிய விருது வென்ற இமான். இவரது இசையில் கடைசியாக சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ படம் கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. இப்போது மலை, பப்ளிக் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹேக்கர் என்னுடைய கணக்கின் தொடர்புடைய மெயில் மற்றும் பாஸ்வேர்டை மாற்றியுள்ளார். மேலும் 24 மணி நேரத்திற்குள் எனது கணக்கில் பதிவுகளையும் பதிவிட்டிருக்கிறார். அதனால் எக்ஸ் தள நிர்வாகத்திடம் எனது கணக்கை விரைவில் மீட்டுத் தரச் சொல்லிக் கேட்டுள்ளேன்.
நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் இருப்பதால், எனது நம்பகத்தன்மை மற்றும் என்னைப் பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இப்போது பதிவிடப்பட்டு வரும் பதிவுகள் ஹேக்கரால் போடப்பட்டுள்ளது. அதனால் அதை தவிர்த்து விடுங்கள். எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்களின் ஆதரவுக்கு நன்றி. எனது கணக்கைத் திரும்பப் பெற்றவுடன் உங்களுக்கு சொல்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பாடகி ஷ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.