லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுட்ன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பின்பு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். சென்னையில் நடந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது படத்திற்கு வலு சேர்த்தது. இதையடுத்து மெட்ரோ ரயில்கள், ஆன்லைன் டெலிவரி பேக்கிங், சுவர் விளம்பரங்கள் என பல்வேறு மாநிலங்களில் விளம்பரங்கள் சூடுபிடித்தன. இதையடுத்து ரசிகர்களிடம் கூலி ஃபீவர் தொற்றிக் கொண்ட நிலையில் முன்பதிவு தொடங்கியதும் முதல் இரண்டு மூன்று நாளைக்கு பெரும்பாலான காட்சிகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. முன்பதிவிலே ரூ.14 கோடி வசூலுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

படத்தில் பிற மொழி நடிகர்கள் இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் நல்ல ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கூலி படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், கூலி படத்தை 36 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.